”அவளின் சுவாசம் நசுக்கி எறியப்பட்டது”… மனைவி மரணம் குறித்து அருண்ராஜா காமராஜ் உருக்கம்!

திரைப்பட இயக்குநரும் பாடகருமான அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்து, கொரோனா தொற்று காரணமாக சமீபத்தில் உயிரிழந்தார். ரஜினிகாந்தின் காலா திரைப்படத்தில் “நெருப்புடா” பாடலை பாடி, பிரபலமானவர் இயக்குநர் அருண் ராஜா காமராஜ். இவரது மனைவி…


திரைப்பட இயக்குநரும் பாடகருமான அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்து, கொரோனா தொற்று காரணமாக சமீபத்தில் உயிரிழந்தார்.

ரஜினிகாந்தின் காலா திரைப்படத்தில் “நெருப்புடா” பாடலை பாடி, பிரபலமானவர் இயக்குநர் அருண் ராஜா காமராஜ். இவரது மனைவி சிந்து, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தஅவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில் அருண்ராஜா காமராஜ் தனது முகநூல் பக்கத்தில் தனது மனைவியை குறித்து உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், என் விழிகளின் வழியே அவளின் சுவாசம் நசுக்கி எறியப்பட்டதை கண்ட நொடி முதல் , நமைச் சுற்றி பரவிக்கிடக்கும் அப்பேராபத்தின் தீவிரம் எனையும் இறுக்கி சுழற்றி இழுத்துக்கொள்ள துடித்தது..

எத்தனை உள்ளங்கள் உதவிகள் அன்புள்ள ஆறுதல்கள் பிரார்த்தனைகள் அலைச்சல்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து மீட்டு விட போராடியும் நச்சு அவள் நாசியினுள் புகுந்து சுவாசத்தை உருக்குலைத்து இயக்கத்தை முடக்கி இன்று இன்னும் எத்தனை எத்தனை உயிர்கள் கிடைக்கும் என்று அவளையும் என்னைவிட்டுப்பிரித்துவிட்டு சென்றது..

நச்சு பாசமறியாது, ஏழ்மையறியாது, அத்யாவசிய அநாவசியங்கள் அறியாது.. இவையெலாம் நமக்கான வாழ்க்கைக்கான அளவீடுகளே அன்றி நச்சுகிருமியின் முன் நாம் அனைவரும் சமமே.. சக மனிதர்களோடு, மனிதத்தோடு வெறுப்பு , வன்மம் , காழ்ப்பு இதை வளர்த்துக் கொள்ள மட்டுமே கற்றுக் கொடுக்கப்பட்டு அதையே ஓர் வாழ்வியலாக்கி வழிந்து ஓடிக்கொண்டிருக்கிறோமோ என்ற சுயபரிசோதனைகளை மேற்கொண்டோமென்றால் இந்த நச்சு நம் பொது எதிரியாகி இந்த போர்க்களம் தன் தீர்வை நோக்கி நகரலாம் என தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.