நாள்தோறும் நூற்றுக்கணக்கான தெரு நாய்களுக்கு உணவளிப்பதோடு – சாலைகளில் அடிபட்டு கை, கால்கள் இல்லாத தெரு நாய்களையும் தாய்மை உணர்வோடு, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பராமரித்து வருகிறார் சென்னையை சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் கலா குபேந்திரன்.இவரின் இந்த அளப்பரிய சேவைப் பணியை நியூஸ்7 தமிழ், செய்தி தொகுப்பாகவும், ஃபீனிக்ஸ் மனிதர்கள் நிகழ்ச்சியின் வாயிலாகவும் வெளி கொண்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் திட்டத்தின் கீழ் இன்று கலாவிற்கு 13 லட்சத்து 58 ஆயிரத்திற்கான காசோலையை தமிழக முதல்வர் வழங்கி கௌரவித்துள்ளார்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிற உன்னத தத்துவத்தை உலகிற்கு கொடுத்தவன் தமிழன். இதானால் தானோ என்னவோ, எல்லா உயிரினங்களிடமும் அன்பு பாராட்டுவதில் தமிழன் தலைசிறந்தவனாக திகழ்கிறான்.
சென்னை தண்டையார்பேட்டை சேர்ந்த கலா குபேந்திரன் என்பவர் தன் சிறு வயது முதற்கொண்டே தெரு நாய்களின் மீது அக்கரையும், அளவு கடந்த அன்பையும் கொண்டவராக இருந்துள்ளார். அதனால் முதலில் தனது தெருவில் உள்ள நாய்க்குட்டிகளுக்கு உணவளிக்க துவங்கிய இவரின் தொண்டானது நாளடைவில் குறைந்தது 200-க்கும் அதிகமான தெரு நாய்களுக்கு உணவளிக்க காரணமாக அமைந்தது.
தெருத் தெருவாக தேடி தேடி சென்று தெரு நாய் குட்டிகளுக்கு உணவளிப்பதோடு, சமூக ஆர்வலர்கள் கொடுத்த பழைய கட்டிடம் ஒன்றில் சாலைகளில் அடிபட்டு கை, கால்களை இழந்த நூற்றுக்கணக்கான நாய்களை வைத்து பராமரித்தும் வருகிறார்.
இவரின் அளப்பரிய பணியை நியூஸ் 7 தமிழ் செய்தி தொகுப்பாகவும், பின்னர் ஃபீனிக்ஸ் மனிதர்கள் நிகழ்ச்சியின் வாயிலாக விரிவான நேர்காணலாகவும் ஒளிபரப்பு செய்தது. இதன் காரணமாக தமிழக அரசு கலா குபேந்திரன் அவர்களின் சேவை தொண்டை பாராட்டி, அவரை கவுரவப்படுத்தியுள்ளது.
வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலார் அவர்களின் வாக்கிய வரிகளுக்கு ஏற்ப திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சென்னை வள்ளுவர் கோட்டத்தில், தமிழக அரசு 5 சிறந்த தொண்டு நிறுவனங்களுக்கு உதவிக்கரம் நீட்டி கெளரவித்தது. இதில் கலா குபேந்திரனுக்கு ரூபாய் 13.58 லட்சம் ரூபாய்க்கான காசோலையை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் முதற்கட்டமாக வழங்கி வாழ்த்து கூறி உள்ளார்.
முதல்வர் மு.க ஸ்டாலினிடம் காசோலையை பெற்றுக்கொண்ட விலங்குகள் நல ஆர்வலரான கலா குபேந்திரன், முதல்வருக்கும், நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கும் முதலில் நன்றி தெரிவித்தார். பின்னர் தான் செய்யும் சேவையை அரசே கவனித்து அங்கீகரிக்கும் அளவிற்கு, பாராட்டும் அளவிற்கு என்னை வெள்ளியுலகிற்கு காட்டிய, அதற்கு உறுதுணையாக, உதவியாக இருந்த அனைவருக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துக்களும், நன்றியும் கூறினார்.
தன்னலம் சிறிதும் இல்லாமல் தெரு நாய்களுக்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்து 15 ஆண்டுகளுக்கு மேலாக சேவை செய்து வரும் சிங்கப்பெண் கலா குபேந்திரனுக்கு வாழ்த்துக்கள் கூற பெருமை கொள்கிறது நியூஸ்7 தமிழ்.










