பொள்ளாச்சி ஆழியாறு அணை பகுதியில் காட்டு யானைகள் கூட்டம் தண்ணீர் அருந்த வருவது, பார்வையாளர்கள் கண்களை கவரும் வண்ணம் அமைந்துள்ளது.
ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரக மலை அடிவாரங்களில் காட்டு மாடு, புலி, சிறுத்தை, செந்நாய், கரடி, யானை, ராஜநாகம், பல்வேறு வகையான பறவைகள் மற்றும் பல வகையான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இங்கு யானைகள் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றன.
பொள்ளாச்சி வனச்சரகத்தையொட்டி அமைந்துள்ளது ஆழியாறு அணை. முன்னாள் முதலமைச்சர் காமராஜரால் கட்டப்பட்ட இந்த அணையைச் சுற்றிலும் இயற்கை எழில் கொஞ்சும் மலைகளும் காடுகளும் நிரம்பியுள்ளன. தமிழ்நாடு மட்டுமல்லாது கேரள எல்லைப் பகுதிகளில் வசித்து வரும் யானைகளுக்கும் ஆழியாறு அணை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் இல்லமாகத் திகழுகின்றன.
இந்த அணை, வனப்பகுதியையொட்டி உள்ளதால் கோடை காலங்களில் வன விலங்குகள் தண்ணீர் அருந்துவதற்காக வந்து செல்வது வழக்கம். இதில் குறிப்பாக யானைக் கூட்டங்கள் அதிக எண்ணிக்கையில் உணவுகள் தேடியும் தண்ணீர் அருந்துவதற்காக தனியாருக்கு சொந்தமான தென்னந்தோப்புக்கள், விவசாய நிலப் பகுதிகள் நீர்நிலைப் பகுதிகளுக்கு வந்து செல்லும்.
தற்போது, கடந்த சில நாள்களாக ஆழியாறு அணையில் குரங்கு நீர்வீழ்ச்சி அருகே உள்ள பகுதி மற்றும் நவமலை செல்லும் வழித்தடங்களில் யானைகள் கூட்டமாக தண்ணீர் அருந்த வந்து செல்கின்றன. இதனால் வனத்துறை உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சுழற்சி முறையில் யானை நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.







