ஆம் ஆத்மி கட்சிக்கு தேசிய கட்சி அந்தஸ்து வழங்கப்பட்டதை அடுத்து, தேசிய சக்திகளுக்கு எதிராக போராட வேண்டி இருப்பதால், ஆம் ஆத்மி கட்சியினர் சிறைக்கு செல்லவும் தயாராக இருக்க வேண்டும் என்று அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையம் ஒவ்வொரு ஆண்டும் தேசிய கட்சி, மாநில கட்சி ஆகிவற்றின் அந்தஸ்தைப் பெறுவதற்கு குறிப்பிட்ட சதவிகித வாக்குகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை உள்ளிட்டவற்றை கணக்கிட்டு அங்கீகாரம் வழங்கி வருகிறது. இந்த அங்கீகாரம் ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கப்படும்.
அந்த வகையில், நேற்று தேசியவாத காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகளின் தேசிய கட்சிகள் என்ற அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சியை தேசிய கட்சியாக தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது.
இதையும் படியுங்கள் : அசோக் கெலாட் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சச்சின் பைலட் – ஆதரவாளர்களுடன் உண்ணாவிரதம்!
இதனை கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் கொண்டாடுவதற்காக, ஆம் ஆத்மி கட்சித் தலைமை அலுவலகத்திற்கு, ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் சென்றார். அங்கு பேசிய அவர், “ஆம் ஆத்மி கட்சிக்கு இவ்வளவு குறுகிய காலத்தில் தேசிய அந்தஸ்து கிடைத்திருப்பது அதிசயம் தான். பொதுமக்கள் மிகப்பெரிய பொறுப்பை நமக்கு வழங்கியுள்ளனர். இறைவனின் அருளோடு இந்த பொறுப்பை நேர்மையுடன் நிறைவேற்றுவோம்.
இப்போது அனைத்து தேசிய சக்திகளுக்கும் எதிராக நாம் போராட வேண்டி இருப்பதால், ஆம் ஆத்மி கட்சியினர் சிறைக்கு செல்லவும் தயாராக இருக்க வேண்டும். நாட்டின் முன்னேற்றத்தைத் தடுக்க விரும்பும் அனைத்து தேசவிரோத சக்திகளும் ஆம் ஆத்மி கட்சிக்கு எதிரானவை. யாராவது சிறைக்குச் செல்வதை நினைத்து தயங்கினால் கட்சியை விட்டு தாராளமாக வெளியேறலாம்.
நேர்மை, தேசபக்தி, மனிதநேயம் ஆகியவை ஆம் ஆத்மி சித்தாந்தத்தின் மூன்று தூண்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். இந்தியாவை உலகின் நம்பர் 1 நாடாக மாற்ற ஆம் ஆத்மி கட்சியில் மக்கள் சேர வேண்டும். ஆம் ஆத்மியில் சேர விரும்புவோர் 9871010101 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுங்கள்” என்று தெரிவித்தார்.








