உக்ரைனின் கார்கிவ், சுமி நகரங்களில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை மீட்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உக்ரைனுக்கான இந்திய தூதர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 10 நாட்களில் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தாயகம் திரும்பி உள்ளனர். உக்ரேனின் கார்கீவ் மற்றும் சுமி ஆகிய நகரங்களில் வசிக்கக்கூடிய மாணவர்களைத் தவிர மற்ற இடங்களில் வசிக்கக்கூடிய அனைத்து மாணவர்களும் கிட்டத்தட்ட உக்ரைனில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்டனர்.
கார்கிவ், சுமி நகரில் உள்ள இந்திய மாணவர்களை மீட்க அனைத்து வழிகளிலும் இந்திய தூதரகம் முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதுவரை மாணவர்கள் தங்களுடைய பொறுமை மற்றும் சகிப்புத்தன்மையை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் இந்திய தூதர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், இத்தகைய கடினமான சூழலில் இந்தியர்கள் குறிப்பாக இந்திய மாணவர்கள் வெளிப்படுத்திய மன உறுதியை நினைத்து தான் பெருமைப்படுவதாக தெரிவி்த்துள்ளார்.
இதனிடையே, உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பது தொடர்பாக பிரதமர் மோடி டெல்லியில் உயர்மட்ட குழுவுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது, மாணவர்களை மீட்கும் நடவடிக்கையை துரிதப்படுத்துதல், விமான சேவையை அதிகரித்தல் உள்ளிட்டவை குறித்து பல்வேறு அறிவுறுத்தல்களை வெளியுறவுத்துறை அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி வழங்கினார்.









