இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்ட நேர முடிவில், இலங்கை அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது இலங்கை அணி. 20 ஓவர் தொடரை 0-3 என்ற கணக்கில் இந்திய கைப்பற்றிய நிலையில், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. முதலாவது டெஸ்ட் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் மார்ச் 4ந்தேதி முதல் 8ந்தேதி வரை நடைபெறுகிறது.
முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மொகாலியில் நேற்று தொடங்கியது. முதலில் விளையாடிய இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 357 ரன்கள் எடுத்திருந்தது.
ஜடேஜா 45 மற்றும் அஸ்வின் 10 ரன்களில் ஆட்டம் இழக்காமல் இருந்தநிலையில் நேற்று 2-வது நாள் ஆட்டம் துவங்கியது . ஜடேஜா, அஸ்வின் இருவரது ஆட்டத்தால் இந்தியா ரன்கள் மெல்ல உயரத் தொடங்கியது.
ஜடேஜா சதம் அடிக்க அஸ்வின் அரை சதம் அடித்தார். 61 ரன்களில் அஸ்வின் வெளியேற அடுத்து வந்த ஜெயந்த் யாதவ் 2 ரன்னில் வெளியேறினார்.இறுதியில், இந்திய அணி 129.2 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 574 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. ஜடேஜா 175, முகமது சமி 20 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
தொடர்ந்து ஆடிய இலங்கை அணி , தொடக்க ஆட்டக்காரர்களான கருணாரத்னே 28, திரிமன்னே 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்ததாக மேத்யூஸ் 22, டிசில்வா 1 ரன்னில் வெளியேறினர். ஆட்ட நேர முடிவில், 43 ஓவரில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்துள்ளது. 3 ம் நாள் ஆட்டம் இன்று காலை 9.30 மணிக்கு துவங்குகிறது.









