பிரதமர் மோடி தொடர்பான பிபிசி ஆவணப்படத்தின் பதிவுகளை நீக்குமாறு ட்விட்டர் மற்றும் யூடியூப் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2002ம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பான விசாரணையின்போது, அம்மாநில முதலமைச்சராக இன்றைய பிரதமர் நரேந்திர மோடி இருந்தார். அப்போது முஸ்லிம்களின் நிலை குறித்து ”இந்தியா : மோடி மீதான கேள்வி” என்ற ஆவணப்படத்தை கடந்த செவ்வாய்க்கிழமை பிபிசி நிறுவனம் லண்டனில் ஒளிபரப்பியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தொடர்ந்து யூடியூபிலும் பதிவேற்றம் செய்யப்பட்டது. இந்த வீடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டது. இதற்கு பலர் நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில், அந்த ஆவணப்படம் தொடர்பான பதிவுகளை நீக்குமாறு ட்விட்டர் மற்றும் யூடியூப் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் (I&B), பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படத்தின் முதல் எபிசோடை முடக்குமாறு தெரிவித்துள்ளதாகவும், இந்த ஆவணப்படம் தொடர்பாக பிரிட்டனின் தேசிய ஒளிபரப்பாளர் பதிவிட்ட 50க்கும் மேற்பட்ட ட்வீட்களை நீக்குமாறு ட்விட்டரிடம் கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரெக் ஓ பிரையன் உள்ளிட்ட சில எதிர்க்கட்சித் தலைவர்கள், பிபிசி ஆவணப்படம் குறித்து வெளியிட்ட ட்விட்டர் பதிவுகள் ட்விட்டர் நிறுவனத்தால் நீக்கப்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021ன் கீழ் அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்தி பதிவுகளை அகற்றுவதற்கு தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், யூடியூப் மற்றும் ட்விட்டர் ஆகிய இரண்டு நிறுவனங்களும், இந்த உத்தரவைப் பின்பற்ற ஒப்புக்கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.