நியூசிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி, ஒருநாள் தொடரையும் கைப்பற்றியுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஒருநாள் போட்டிகள், 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. அதன்படி முதலாவது ஒருநாள் போட்டி கடந்த 18ம் தேதி ஐதராபாத்தில் நடைபெற்றது. அந்த போட்டியில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் இந்திய அணி ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் 2வது ஒருநாள் போட்டி ராய்பூர் மைதானத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி தொடக்கம் முதலே ரன்களை குவிக்க முடியாமல் தடுமாறியது. இறுதியில் 34.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 108 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 3 விக்கெட்டுகளும், ஹர்திக் பாண்டியா மற்றும் வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர்.
இதையடுத்து 109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 20.1 ஓவர்களிலேயே, 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 111 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன் ரோஹித் சர்மா 51 ரன்களும், ஷுப்மன் கில் 40 ரன்களும் குவித்து அசத்தினர். இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது.