ஐபிஎல்: பிளே-ஆஃப் சுற்றுக்கு பெங்களூரு அணி தகுதி?

இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐபிஎல்) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. 15ஆவது சீசனில் யார் சாம்பியன் பட்டம் வெல்லப் போவது என்பது வரும் 29ம் தேதி தெரிந்துவிடும். புள்ளிப் பட்டியலில்…

இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐபிஎல்) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது.

15ஆவது சீசனில் யார் சாம்பியன் பட்டம் வெல்லப் போவது என்பது வரும் 29ம் தேதி தெரிந்துவிடும். புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறும். இந்த சீசனில் முதல் முறையாக அறிமுகமான ஹார்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியும் பிளே-ஆஃப் சுற்றுக்கு ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டன.
புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கும் ராஜஸ்தானுக்கு இன்னும் ஒரு ஆட்டம் உள்ளது. இன்று தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ராஜஸ்தான் எதிர்கொள்ளவுள்ளது. இந்த ஆட்டத்தில் ஒருவேளை ராஜஸ்தான் தோல்வியைத் தழுவினாலும் பிளே-ஆஃப் சுற்றுக்கு செல்வதில் பெரும் சிக்கல் இருக்காது.

ஏன் என்றால் நாளையும் நாளை மறுநாளும் மட்டுமே ஆட்டங்கள் உள்ளன. மும்பை இந்தியன்ஸ்-டெல்லி அணிக்கு இடையிலான ஆட்டம் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
டெல்லி அணி 14 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது. ஒருவேளை டெல்லி அணி அதிக ரன் ரேட்டுகளுடன் வெற்றி பெற்றால் பிளே-ஆஃப் சுற்றுக்கு செல்ல வாய்ப்புள்ளது. இதனால், பெங்களூரு அணி பிளே-ஆஃப் சுற்று வாய்ப்பை இழக்க நேரிடலாம்.

முன்னதாக, புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ள குஜராத் அணியை நேற்று சந்தித்த பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்த குஜராத் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ஹார்திக் பாண்டியா 62 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 169 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி 18.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய விராட் கோலி 73 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். அவர் ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.

சரியான நேரத்தில் சிறப்பாக விளையாடி பெங்களூரு அணியை பிளே-ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை ஏற்ரபடுத்திக் கொடுத்துள்ள கோலியை சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.