மாநிலத்துக்கு வெளியில் தொலைதூர கல்வி மையங்களை துவங்க பல்கலைக் கழகங்களுக்கு தடை விதித்து பல்கலைக்கழக மானியக் குழு பிறப்பித்த விதி செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அண்ணாமலை பல்கலைக்கழகம் தொலைதூர கல்வி வழங்க அங்கீகாரம் வழங்கிய பல்கலைக்கழக மானியக் குழு, பிற மாநிலங்களில் தொலைதூர கல்வி வழங்கக் கூடாது என நிபந்தனை விதித்தது. இதை எதிர்த்து அண்ணாமலை பல்கலைக்கழகம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், குறிப்பிட்ட அந்த நிபந்தனையை ரத்து செய்து உத்தரவிட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதை எதிர்த்து பல்கலைக்கழக மானியக் குழு மேல் முறையீடு செய்தது. அதேபோல,
தொலைதூர கல்வி விதிகளை மீறி மாணவர்களை சேர்க்க கூடாது என பல்கலைக்கழக மானியக் குழு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து பெரியார், பாரதிதாசன், சென்னை
பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களின் சார்பிலும் வழக்குகள் தொடரப்பட்டன.
அத்தனை வழக்குகளையும் விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் குமரேஷ்
பாபு அமர்வு, பல்கலைக்கழக மானியக் குழு விதிகளில், உயர்கல்வி நிறுவனங்கள்
செயல்படும் எல்லை குறித்த கொள்கையில், குறிப்பிட்ட மாநிலங்களுக்குள் மட்டுமே
செயல்பட வேண்டும் எனவும், எல்லையை தாண்டி செயல்பட முடியாது எனவும்
கூறப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்கும் உள்கட்டமைப்பு வசதிகளோ,
நிபுணத்துவமோ இல்லாதவர்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு பல்கலைக்கழகங்கள்
தங்கள் விருப்பம் போல், தொலைதூர கல்வி மையங்களை துவங்கி, கல்வியை
வணிகமயமாக்கியதால் தான் பல்கலைக்கழக மானியக் குழு இந்த விதிகளை கொண்டு
வந்துள்ளதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், மாநில அரசு நடத்தும் பல்கலைக்கழகங்களும் பிற மாநிலங்களில் மையங்களை துவங்கியுள்ளது குறித்தும் அதிர்ச்சி தெரிவித்தனர்.
மாநிலத்துக்கு வெளியில் தொலைதூர கல்வி மையங்களை துவங்குவதை தடுக்கும் வகையில் விதிகளை கொண்டு வர பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு அதிகாரம் உள்ளதாகக் கூறிய நீதிபதிகள், இதுசம்பந்தமாக பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகள் செல்லும் என அறிவித்து, வழக்குகளை முடித்து வைத்தனர்.
– யாழன்