பற்களை பிடுங்கிய பல்வீர் சிங்..! வெளியான பாதிக்கப்பட்டவரின் மருத்துவ அறிக்கை..!

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரத்தில், விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில், பாதிக்கப்பட்ட அருண்குமார் என்பவரின் மருத்துவ ஆவணங்கள் வெளியாகி உள்ளன. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் ஏ.எஸ்.பி-யாக இருந்த பல்வீர் சிங், விசாரணை…

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரத்தில், விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில், பாதிக்கப்பட்ட அருண்குமார் என்பவரின் மருத்துவ ஆவணங்கள் வெளியாகி உள்ளன.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் ஏ.எஸ்.பி-யாக இருந்த பல்வீர் சிங், விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக பல்வீர் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அத்துடன், அவர் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக ஐ.ஏ.எஸ் அதிகாரியான அமுதா விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், ஏஎஸ்பி பல்வீர் சிங்கால், பாதிக்கப்பட்ட அருண்குமாரை, அவரது தாயார் ராஜேஸ்வரி என்பவர் 20 நாள்களுக்குப் பின்னர் மார்ச் 31ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் காவல்கிணறு பகுதியில் உள்ள ராஜா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது பற்களைப் பரிசோதித்த மருத்துவர், 7 பற்கள் பாதிக்கப்பட்டிருப்தாகத் தெரிவித்துள்ளார்.

அதோடு, சிகிச்சைக்கு வருவதற்கு 20 நாட்களுக்கு முன்பாகவே வலுக்கட்டாயமாக பற்கள் பிடுங்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மார்ச் 10ஆம் தேதி காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு சென்ற அருண்குமாரின் பற்களை, ஏஎஸ்பி பல்வீர் சிங் பிடுங்கியது உறுதியானதாக கூறப்படுகிறது.

இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக, விசாரணை அதிகாரியான அமுதா ஐஏஎஸ், மீண்டும் வரும் 17 மற்றும் 18ஆம் தேதிகளில் விசாரிக்க உள்ளதாக தெரிவித்துள்ள மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயேன், அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் விசாரணை மேற்கொள்ள உள்ளதாக தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.