அனைவருக்கும் பக்ரீத் திருநாள் வாழ்த்துகள் – அன்புமணி!

உலகம் முழுவதுமுள்ள இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் அன்புமணி பக்ரீத் திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “இஸ்லாமிய இறைதூதர்களில் ஒருவரான இப்ராகிம் நெடுநாட்களுக்கு பிறகு தமக்கு பிறந்த மகன் இஸ்மாயிலை கனவில் கிடைத்த இறைவனின் கட்டளையை மதித்து உயிர்ப்பலி கொடுக்கத் துணிந்தார். தமக்காக மகனையே தியாகம் செய்யத் துணிந்த இறைதூதரை எண்ணி வியந்த இறைவன், உடனடியாக வானவரை அனுப்பி இஸ்மாயில் பலிகொடுக்கப்படும் நிகழ்வை தடுத்து நிறுத்தியதுடன், அதற்குப் பதிலாக ஆட்டைக் கொடுத்து பலியிடும்படி கேட்டுக் கொண்டார். இறைதூதர் இப்ராகிமின் தியாக உள்ளத்தைப் பாராட்டும் விதமாகவே உலகம் முழுவதும் பக்ரீத் திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இது திருவிழா மட்டுமல்ல… இறைபக்தியை நினைவூட்டும் நாளும் கூட.

இறைபக்தியையும் கடந்து இந்தத் திருநாள் வலியுறுத்தும் செய்தி இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவ வேண்டும்; அண்டை வீட்டாருடன் நல்லுறவை பாராட்ட வேண்டும் என்பதாகும். அதற்காகத் தான் ஆடு, மாடு ஒட்டகம் போன்றவற்றை பலியிடுவதன் மூலம் கிடைக்கும் இறைச்சியை மூன்று சம பங்குகளாக பிரித்து, ஒரு பங்கை அண்டை வீட்டாருக்கும், நண்பர்களுக்கும் மற்றொரு பங்கை ஏழைகளுக்கும் கொடுத்துவிட்டு மூன்றாவது பங்கை தங்கள் தேவைகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்று பக்ரித் வலியுறுத்துகிறது. இது அனைவரும் கடைபிடிக்க வேண்டிய அற்புதமான பாடமாகும்.

கொடையும், தியாகாமும் தான் உலகில் சிறந்தவை என்பதை உணர்த்தும் எந்தத் திருவிழாவும் உலகில் அனைவருக்குமான திருவிழா தான். அந்த வகையில் பக்ரீத் திருநாளை அனைவரும் கொண்டாட வேண்டும்; அது சொல்லும் பாடங்களை அனைவரும் பின்பற்ற வேண்டும். உலகம் முழுவதும் அன்பு, அமைதி, சகோதரத்துவம், நல்லிணக்கம், ஒற்றுமை, மகிழ்ச்சி, வளம் உள்ளிட்டவை செழிக்க வேண்டும் என்று கூறி மீண்டும் ஒருமுறை பக்ரீத் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.