மத்திய கிழக்கு நாடுகளில் மீண்டும் போர் தொடங்கியுள்ளது. லெபனான் மீதான தாக்குதலையடுத்து இஸ்ரேல் மீது ஈரான் நேற்று ஏராளமான ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. பதிலுக்கு இஸ்ரேலும் மத்திய மற்றும் மேற்கு ஈரான் பகுதிகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த நிலையில் தற்போது இஸ்ரேல் மற்றும் ஈரானில் உள்ள இந்திய குடிமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும் படி இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக ஈரானில் உள்ள இந்திய தூதரகம் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சமீபத்திய நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு, அனைத்து இந்தியக் குடிமக்களும் ஈரானுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. தற்போது ஈரானில் உள்ள இந்தியர்கள், கிடைக்கக்கூடிய போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்தி நாட்டை விட்டு வெளியேற வேண்டும்” என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதே போல், இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள பதிவில், “இஸ்ரேலில் உள்ள அனைத்து இந்தியக் குடிமக்களும் மிகுந்த எச்சரிக்கையுடனும், எல்லா நேரங்களிலும் விழிப்புடனும் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மறு அறிவிப்பு வரும் வரை, இஸ்ரேலுக்குள் அத்தியாவசியமற்ற மற்றும் தேவையற்ற அனைத்துப் பயணங்களையும் இந்தியக் குடிமக்கள் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். குடிமக்கள் உள்ளூர் செய்திகள். அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மற்றும் அவசரகால எச்சரிக்கைகளைத் தவறாமல் கண்காணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




