புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் பள்ளி மாணவர் விடுதி முன்பு
கொட்டப்படும் குப்பையால் துர்நாற்றம் வீசுவதால் மாணவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் , திருமயத்தில் திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில்
அரசு பள்ளி மாணவர் விடுதி உள்ளது. திருமயம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில்
சேகரிக்கப்பட்டு வரும் குப்பைகள் இந்த மாணவர் விடுதி முன்பு கொட்டப்படுகிறது.
மேலும் , கடைவீதி பகுதியில் உள்ள கோழி மற்றும் மீன் கழிவுகளையும் , சாலை
ஓரங்களில் வியாபாரிகள் கொட்டிவிடுகின்றனர்.
இந்த கழிவுகளால் பள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள் மிகுந்த
சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும், காலை நேரங்களில் இந்த வழியாக நடைபயிற்சி
செய்பவர்கள் , விவசாயிகள் மற்றும் வயதானவர்கள் செல்லும் போது துர்நாற்றம்
அடிப்பதுடன் மூச்சுத்திணறலும் ஏற்படுகிறது. இதனால், துணியால் வாயை
மூடிக்கொண்டு செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், குப்பைகளை தீ வைத்து கொளுத்துவதால் புகை மூட்டம் ஏற்பட்டு வாகன
ஓட்டிகள் விபத்தில் சிக்கி கொள்வதாகவும் தெரிவிக்கின்றனர். மாணவர் விடுதி
எதிரே குப்பை கிடங்கு இருப்பதால் விடுதி மாணவர்களுக்கு , பல்வேறுவிதமான
நோய்த்தொற்றுகள் ஏற்படுகிறது. மேலும், கொசு மற்றும் ஈக்கள் அதிகமாக உள்ளதால்
மாணவர்கள் உணவு சாப்பிட முடியாத நிலையும் உள்ளது.
இதுகுறித்து அரசு அதிகாரிகள், மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை புகார் அளித்தும்
இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும், குப்பை
கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் , சாலையின் இருபுறமும் உள்ள
குப்பைகளை பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி அகற்ற வேண்டும்
என கோரிக்கை விடுத்துள்ளனர்.
—-கு.பாலமுருகன்







