அமெரிக்கா நடத்திய வான் தாக்குதலில் அல் கயிதா தலைவர் அல் ஜவாஹிரி கொல்லப்பட்ட நிலையில், அவரது முழு பின்னணி குறித்து தற்போது பார்ப்போம்.
எகிப்து தலைநகர் கெய்ரோவில் வசித்து வந்த நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர் அல் ஜவாஹிரி.
இவரது தாத்தா அல் அசார், கெய்ரோவில் உள்ள புகழ்பெற்ற மசூதி ஒன்றின் இமாமாக இருந்தவர்.
சிறு வயதிலேயே இஸ்லாத்தின்பால் தீவிர ஈடுபாடு கொண்ட அல் ஜவாஹிரி, முஸ்லிம் பிரதர்ஹூட் அமைப்பில் இணைந்து தனது 15வது வயதில் சிறை சென்றவர்.
தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்ட வழக்கில் கடந்த 1981ல் கைது செய்யப்ப்டட அல் ஜவாஹிரி, 3 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தவர்.
படித்து பட்டம் பெற்று கண் மருத்துவரான அல் ஜவாஹிரி, எகிப்தில் தூய இஸ்லாமிய ஆட்சியை நிருவுவதற்காக முனைப்பு காட்டியவர்.
1986ல் பின் லேடனை சந்தித்த அல் ஜவாஹிரி, அதன் பின் அவரோடு இணைந்து செயல்பட்டவர்; அவருக்கு மருத்துவராகவும் இருந்தவர்.
1993ல் எகிப்து இஸ்லாமிய ஜிகாத் அமைப்பின் தலைவராக இருந்த அல் ஜவாஹிரி, அப்போதைய எகிப்து அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தி கவனத்தை ஈர்த்தவர்.
ஜிகாத் மூலம் 1,200க்கும் மேற்பட்ட எகிப்தியர்கள் கொல்லப்பட்டதில் அல் ஜவாஹிரிக்கு தொடர்பு இந்தது கண்டறியப்பட்டது.
1998ல் எகிப்து இஸ்லாமிய ஜிகாத் அமைப்பை அல் கயிதாவுடன் இணைத்தார் அல் ஜவாஹிரி.
நைரோபி, கென்யா, தான்சானியா நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மீது 1998ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டன. இதில் 224 பேர் கொல்லப்பட்டனர். இந்த தீவிரவாத சம்பவங்களில் அல் ஜவாஹிரிக்கு தொடர்பு இருந்தது கண்டறியப்பட்டது.
அமெரிக்காவின் இரட்டை கோபுரங்கள் மீது 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை அடுத்தே அல் ஜவாஹிரி சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டார்.
அவர் குறித்த தகவலை தருபவர்களுக்கு 25 மில்லியன் அமெரிக்க டாலர் வெகுமதியாக வழங்கப்படும் என அமெரிக்க அரசு அறிவித்தது.
2001ன் இறுதியில் ஆப்கனிஸ்தானுக்கு பின் லேடனும் அல் ஜவாஹிரியும் தப்பி ஓடினர்.
2003ல் சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலில் 9 அமெரிக்கர்கள் உள்பட 23 பேர் கொல்லப்பட்டனர். இதிலும் அல் ஜவாஹிரிக்கு தொடர்பு இருந்தது கண்டறியப்பட்டது.
கடந்த 2007ல் 16 ஆடியோ மற்றும் வீடியோ உரைகளை அளித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் அல் ஜவாஹிரி.
அல் ஜவாஹிரி எங்கிருக்கிறார் என்பது மிகுந்த ரகசியமாக இருந்தது. எனினும், அவர் ஆப்கனிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் எல்லையில் இருக்கக்கூடும் என கணிக்கப்பட்டது.
அல் ஜவாஹிரியை கொல்லும் நோக்கில் 2006ல் ஆப்கனிஸ்தான் – பாகிஸ்தான் எல்லையில் அமெரிக்கா வான் தாக்குதல் நடத்தியது. இதில் அல் கயிதாவைச் சேர்ந்த 4 பேர் கொல்லப்பட்டனர். எனினும், அல் ஜவாஹிரி தப்பினார்.
2011ல் பின் லேடனை அமெரிக்கா கொன்றதை அடுத்து அல் கயிதா அமைப்பின் தலைவரானார் அல் ஜவாஹிரி.
எனினும், பின் லேடனைப் போன்ற வசீகரம் இல்லாததால் அல் கயிதா மங்கத் தொடங்கியது.
எனினும், அமெரிக்காவின் ஹிட் லிஸ்டில் இருந்த அல் ஜவாஹிரி ஜூலை 31ம் தேதி அதன் வான் தாக்குதலில் தனது 71வது வயதில் கொல்லப்பட்டார்.









