அமெரிக்கா நடத்திய வான் தாக்குதலில் அல் கயிதா தலைவர் அல் ஜவாஹிரி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
ஆப்கனிஸ்தானின் தலைநகர் காபூலில் கடந்த சனிக்கிழமை இந்த தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் அதனை ஜோ பைடன் தற்போது உறுதிப்படுத்தி உள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தான் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் கடந்த சனிக்கிழமை நடத்தப்பட்ட வான் தாக்குதல் வெற்றிகரமாக முடிந்திருப்பதாகவும், அல் ஜவாஹிரி கொல்லப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதன் மூலம் நீதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க மக்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்கள் எங்கே பதுங்கி இருந்தாலும், எவ்வளவு காலம் ஆனாலும் அவர்கள் கொல்லப்படுவார்கள் என்றும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அல் கயிதா தலைவராக இருந்த பின் லேடனின் தலைவராகவும், அவர் இருந்தபோது அல் கயிதாவின் துணைத் தலைவராகவும் இருந்த அல் ஜவாஹிரி, லேடனின் மறைவுக்குப் பிறகு அதன் தலைவரானார்.
அமெரிக்காவின் இரட்டை கோபுரங்கள் தாக்கப்பட்டதில் அல் ஜவாஹிரிக்கு ஆழமான தொடர்பு இருந்ததாகத் தெரிவித்துள்ள ஜோ பைடன், ஆப்கனிஸ்தானிலும், அதற்கு அப்பாலும் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும் என தான் அளித்த உறுதிமொழியை சுட்டிக்காட்டி, அது தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு ஆப்கனிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது. காபூலின் ஷெர்பூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டை குறிவைத்து ஆளில்லா விமானம் மூலம் அமெரிக்கா தாக்குதல் நடத்தி இருப்பதாகக் கூறியுள்ள தாலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித், அமெரிக்காவின் இந்த அத்துமீறல் தோஹா சர்வதேச ஒப்பந்தத்தின்படி குற்றச் செயல் என குறிப்பிட்டார்.
அல் ஜவாஹரி குறித்த தகவல் அளிப்பவர்களுக்கு 25 மில்லியன் டாலர் வெகுமதி வழங்கப்படும் என அமெரிக்கா ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.