பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தமிழ்நாடு அரசே முன் நின்று விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை திருவிக நகர் தொகுதிக்கு உட்பட்ட ஓட்டேரி சுப்புராயன் தெருவில், பெண்கள் மீதான பாலியல் வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சமூகத்தில் சரிபாதியாக இருக்கக்கூடிய பெண்களுக்குச் சமத்துவமான உரிமை வழங்கப்பட வேண்டும். குடும்ப வன்முறை மற்றும் பாலியல் வன்முறைகளிலிருந்து பெண்கள் பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்க வேண்டும் எனக் கூறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், ஆண்களுடைய மனோநிலையில் ஒரு மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் குடும்ப வன்முறை எதிர்ப்பு பிரச்சார இயக்கத்தைத் தமிழ்நாடு முழுவதும் நடத்தி வருவதாகத் தெரிவித்த அவர், அதன் ஒரு பகுதியாகச் சென்னையில் இன்று இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டதாகவும் சமீபத்தில் நடத்திய ஒரு ஆய்வில் இந்தியாவில் குடும்ப வன்முறை அதிகமாக
நடைபெறும் மாநிலங்களில் ஐந்தாவது இடத்தில் தமிழ்நாடு உள்ளதாகக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்த ஆய்வு முடிவு மிகுந்த கவலை அளிப்பதாகவும், தினம் தினம் பத்திரிகைகளைப் புரட்டினால் பாலியல் கொடுமைக்குப் பெண்கள், மாணவிகள் சிறுமிகள் ஆளாகி தற்கொலை செய்து கொள்கின்றனர் என்ற செய்தி வருவது தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள அவமானம் எனத் தெரிவித்தார்.
பெண்ணுரிமையைப் பாதுகாக்க குடும்ப வன்முறையைத் தடுக்க இந்த பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்த அவர், தமிழ்நாடு அரசாங்கமும் பெண் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். மேலும், இந்த விழிப்புணர்வு இயக்கத்தை அரசே முன் நின்று நடத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.