கல்லூரிப்பருவத்தில் மகிழ்ச்சிகரமாக இருப்பது எப்படி என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை சென்னை வேப்பேரி GSS ஜெயின் மகளிர் கல்லூரியில் நியூஸ் 7 தமிழின் அன்பு பாலம் & வெங்கடேஸ்வரா மருத்துவமனை இணைந்து நடத்தியது.
கொரோனாவால் ஏற்பட்ட ஊரடங்கு காரணமாக ஆன்லைன் கல்வி ஒரு வருடத்திற்கு மேலாக நடந்து கொண்டிருந்தது. அதற்கு பின் மீண்டும் பள்ளிகள், கல்லூரிகள் வழக்கம் போல் செயல்பட்டு வருகின்றன. கொரோனா ஏற்படுத்திய தாக்கம் காரணமாக மாணவர்கள், வளரிளம் பருவத்தினர் கடுமையான மனச்சிதைவுக்கு ஆளாவதும், உயிரிழப்பு என்ற விபரீத முடிவுகளை எடுப்பதும் அண்மைக்காலமாக அதிகரித்துள்ள சூழலில், அதைத் தடுப்பது மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் நியூஸ் 7 தமிழின் அன்பு பாலம் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக வெங்கடேஸ்வரா மருத்துவமனையுடன் இணைந்து வேப்பேரியில் உள்ள GSS ஜெயின் மகளிர் கல்லூரியில் பயிலும் மாணவியருக்கு, எப்படி மகிழ்ச்சியான வாழ்வை வாழலாம் ? ஆரோக்கியமான வாழ்வை வாழ்வது எப்படி ? என்ன மாதிரியான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் ? கல்லூரிக் காலத்தில் மனச்சிதைவுக்கு எது தூண்டுகிறது ? அதைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும் ? என்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நியூஸ் 7 தமிழின் அன்பு பாலம் நடத்தியது.
இதில் நூற்றுக்கணக்கான மாணவியர் பங்கேற்று உணவு, தூக்கம், குடிநீர் அருந்துதல், பிரச்சனைகளை எதிர்கொள்ளுதல் குறித்து பல்வேறு சந்தேகங்களுக்கு கேள்விகளை எழுப்பினர். மாணவியரின் கேள்விகளுக்கு மருத்துவர்கள் பதிலளித்து உரையாடினர்.
நீண்ட நாட்கள் லாக்டவுனில் இருந்து, இப்போது மீண்டும் கல்லூரி திரும்பிய சூழலில் இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக மாணவியர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.







