காவிரி நதிநீர் விவகாரம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பிரச்சனைகளில் தொடர்ந்து
குரல் கொடுத்து வரும் நடிகர் ரஜினிகாந்த், ஆளுநரை சந்தித்ததிலோ அல்லது அரசியல் பேசியதிலோ எந்த தவறும் இல்லை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 75-வது சுதந்திர தின அமுத பெருவிழாவை முன்னிட்டு, பாஜக மீனவர்
பிரிவு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த படகுப் பேரணியை சென்னை
நீலாங்கரையில் உள்ள வங்கக்கடலில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை துவக்கி வைத்தார். 250 படகுகளில் தேசியக்கொடி ஏந்தி சென்ற பேரணியை வழிநடத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர். அதை முன்னிட்டு அனைவரின் வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்றுவதைக் கூட அரசியலாக்கும் திருமாவளவனின் அரசியல் கீழ்த்தரமானது. அவர் பிற்போக்குத்தனமாக யோசிக்கிறார்.
பொதுமக்கள், பல்துறை சாதனையாளர்கள், பிரபலங்கள் உள்ளிட்டோரை சந்தித்து பேசுவது ஆளுநரின் மரபு. காவிரி நதி நீர் விவகாரம் உள்ளிட்ட தமிழ்நாட்டின்
பிரச்சனைகளில் நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். அவர்
ஆளுநர் மாளிகையில் ஆளுநரை சந்தித்து பேசியதிலோ, அவருடன் அரசியல் பேசியதிலோ எந்தத் தவறும் இல்லை. இருவரைத் திட்டி பேசுவது அரசியல் இல்லை. சமுதாயத்தில் நாட்டில் உள்ள விஷயங்களைப் பற்றி பேசுவது தான் அரசியல்.
அரசியல் இல்லாத வாழ்க்கையே இல்லை. ரஜினி – ஆளுநர் சந்திப்பை திமுகவின் ஆக்ஸிஜனில் உயிர் வாழும் காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட கட்சிகள் அரசியலாக்குவது தவறு. ஆவின் உட்பட பால் வளத் துறையில் நடைபெற்று வரும் ஊழல்களைப் பற்றி, துறை அமைச்சர் நாசரே தனது உளறல்கள் வாயிலாக வெளிக்கொண்டு வந்துள்ளார். உளறல் மற்றும் ஊழல் அமைச்சர்களின் வரிசையில் மா.சுப்பிரமணியனும் இணைந்துள்ளார். உளறுவதன் மூலம் அமைச்சர்கள் தமிழ்நாட்டை முட்டுச்சந்தில் நிறுத்திவிடுவார்கள் என்றார்.
-ம.பவித்ரா








