எரிபொருள் விலைக்கு ஏற்ப ஆட்டோ கட்டணத்தை நிர்ணயிக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் எஸ்.வி.ராமமூர்த்தி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “2015ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆட்டோ கட்டணம் மாற்றியமைக்கப்பட்ட பிறகு டீசல், பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. ஆனால், கடந்த 7 ஆண்டுகளாக கட்டணம் மறுநிர்ணயம் செய்யப்படவில்லை. எரிபொருள் விலை ஏற்றத்தால் ஆட்டோ கட்டணத்தையும் ஓட்டுநர்கள் தானாகவே உயர்த்தி வசூலிக்கிறார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
எரிபொருள் விலைக்கு ஏற்ப கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதையும் சுட்டிக்காட்டி உள்ளார். அந்த உத்தரவின் அடிப்படையில் எரிபொருள் விலை மாற்றத்திற்கு ஏற்ப குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆட்டோ கட்டணத்தை மாற்றி அமைக்க கோரியும், மின்னணு மீட்டர்களில் தானாகவே கட்டணத்தை மாற்றிக்கொள்ளும் வகையிலான தொழில்நுட்பத்தையும் அமல்படுத்த வேண்டுமென கோரியிருந்தார்.
இந்த வழக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.கிருஷ்ணகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் எஸ்.வி.ராமமூர்த்தி ஆஜராகி வாதங்களை முன்வைத்தார். தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி வழக்கு குறித்து பதிலளிப்பதாக தெரிவித்தார். இதையேற்ற நீதிபதிகள் நான்கு வாரங்களில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.