தலைவி படத்தை தொடர்ந்து எமர்ஜென்சி, சந்திரமுகி என அடுத்து 2 படங்களில் நடித்து, ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளார் கங்கனா ரனாவத்.
இந்தியாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வரும் கங்கனா ரனாவத், தனது தனித்துவமான நடிப்பால் உலகம் முழுவதும் ரசிகர்களை ஈர்த்து வருகிறார். அவரது நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் இந்திய சினிமாவின் மைல்கல்லாக இருந்து வரும் அதே நேரத்தில், சர்ச்சை கருத்துகளை தெரிவித்து பிரச்னைகளில் அவர் சிக்கி கொள்வதும் வழக்கமாக உள்ளது.
கங்கனா தெரிவித்த சர்ச்சை கருத்துகள் அவரது திரைப்படங்களிலும் எதிரொலித்துள்ளது. மிகப்பெரிய பொருட்செலவில் கங்கனா ரனாவத் நடித்த ’தாகட்’ திரைப்படம், கடந்த மே மாதம் வெளியாகி படுதோல்வியை சந்தித்தது. இந்த தோல்விக்கு, அவர் முன்பு தெரிவித்திருந்த சர்ச்சை கருத்துகள் தான் காரணம் என கூறப்படுகிறது.
சர்ச்சைகள் ஒருபுறம் இருந்தாலும் தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்தி வரும் கங்கனா ரனாவத் அடுத்ததாக, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கையை மையமாக கொண்ட படத்தை இயக்கி நடித்து வருகிறார். ’தலைவி’ படத்தை தொடர்ந்து ஆளுமையுள்ள பெண் தலைவர் கதாப்பாத்திரத்தில் அவர் தோன்றுவதால் அப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அதைத் தொடர்ந்து பி.வாசு இயக்கி வரும் சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் கங்கனா ரனாவத் நடிக்க உள்ளார். முதல் பாகத்தில் சந்திரமுகி கதாப்பாத்திரத்தில் ஜோதிகா நடித்த நிலையில், தற்போது இரண்டாம் பாகத்தில் கங்கனா ரனாவத் சந்திரமுகியாக நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாகவும், வடிவேலு ஒரு முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடிக்கின்றனர்.
நடிப்பு மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களில் தெரிவிக்கும் சர்ச்சை கருத்துக்களால் கவனம் பெற்று வரும் கங்கனா, இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளது ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. அதேபோல், சந்திரமுகி 2ம் பாகத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.







