அரசு கல்லூரிகளில் மாணவர்கள் போராட்டத்தில் பங்கேற்பதை தடை செய்ய ஒருங்கிணைந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கல்லூரி கல்வி இயக்ககம் அனைத்து அரசுக் கல்லூரி முதல்வருக்கும்ம் சுற்றறிக்கை அனுப்பியது இதனையடுத்து கடும் எதிர்ப்பு எழுந்ததும் அந்த அறிவிப்பை கல்லூரி கல்வி இயக்ககம் திரும்பப்பெற்றது.
இதுகுறித்து, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வெளியிட்டுள்ள எக்ஸ்தளப்பதிவில் கூறியிருப்பதாவது, “மாணவர்கள் ஜனநாயக ரீதியில் போராடுவதற்கு தடை விதிக்கும் வகையில் கல்லூரிக் கல்வி ஆணையர் வெளியிட்ட சுற்றறிக்கையை, கடும் எதிர்ப்புகளுக்குப் பிறகு தவெக அரசு திரும்பப் பெற்றுள்ளது. இதேபோல், நேற்று குஜிலியம்பாறை வட்டாட்சியரின் சர்ச்சைக்குரிய அறிக்கையும் வெளியாகி திரும்பப் பெறப்பட்டுள்ளது.
அரசின் உத்தரவின்றி அதிகாரிகள் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்களா? அல்லது முதலில் தனது பாசிச அரசியலைத் தொடங்க ஆழம் பார்த்துவிட்டு, எதிர்ப்பு வந்ததும் அதிகாரிகள் மீது பழியைப் போட்டு பின்வாங்குகிறதா இந்த அரசு? ஜனநாயக உரிமைகளை பறிக்க முயற்சிப்பதும், எதிர்ப்பு எழுந்ததும் பின்வாங்குவதும் தவெக அரசில் தொடர்கதையாகிவிட்டது.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




