கும்மிடிப்பூண்டி – கூடூர் இடையே புதிய ரயில் வழித்தடம் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

தமிழ்நாடு உட்பட 4 மாநிலங்களில் 410 கி.மீ தூரத்திற்குப் புதிய ரயில் பாதைகள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்திய ரயில்வே அமைப்பை விரிவாக்கவும், பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்தை விரைவுபடுத்தவும் சுமார் 9,450 கோடி ரூபாய் மதிப்பிலான 4 முக்கிய ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், ஒடிசா, மேற்கு வங்காளம் ஆகிய 4 மாநிலங்களில் உள்ள 8 மாவட்டங்களை உள்ளடக்கி சுமார் 410 கிலோமீட்டர் தூரத்திற்குப் புதிய ரயில் பாதைகள் அமைக்கப்படவுள்ளன. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி, கும்மிடிப்பூண்டி – கூடூர் (3 மற்றும் 4-வது பாதைகள்): தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநிலங்களை இணைக்கும் வகையில் 90 கி.மீ தூரத்திற்கு 3-வது மற்றும் 4-வது வழித்தடங்கள் அமைக்கப்படவுள்ளன

கரக்பூர் – பத்ரக்: மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா இடையே 173 கி.மீ தூரத்திற்கு 4-வது ரயில் பாதை அமைக்கப்படும்

பத்ரக் – ஹரிதாஸ்பூர்: ஒடிசாவில் 75 கி.மீ தூரத்திற்கு 4-வது வழித்தடம் உருவாக்கப்படும்.

கட்டாக் – பாரதீப் : ஒடிசா துறைமுக இணைப்பை மேம்படுத்த 72 கி.மீ தூரத்திற்குப் புதிய பாதைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இத்திட்டங்கள் மூலம் 6,448 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 60 லட்சம் மக்கள் நேரடி ரயில் இணைப்பு வசதியைப் பெறுவார்கள். ஆண்டுக்குக் கூடுதலாக 76 மில்லியன் டன் சரக்குகளைக் கையாளும் வகையில் ரயில்வேயின் கொள்ளளவு அதிகரிக்கும்.  9,450 கோடி ரூபாய் மதிப்பிலான இத்திட்டங்கள் அனைத்தும் 2030-31 நிதியாண்டுக்குள் முழுமையாகக் கட்டி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை வழியிலான கும்மிடிப்பூண்டி – கூடூர் தடத்தில் கூடுதல் ரயில் பாதைகள் அமைக்கப்படுவதன் மூலம், தென்மாநிலங்களுக்கும் வடமாநிலங்களுக்கும் இடையிலான ரயில் பயணம் மேலும் விரைவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.