ஓசூரில் தனியார் வங்கி ஏடிஎம்-ஐ உடைத்து கொள்ளை முயற்சி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தென்றல் நகர் பகுதியில் இயங்கி வரும் தனியாருக்குச் சொந்தமான ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். இயந்திரத்தை உடைக்க முடியாததால் அதிலிருந்து சுமார்…

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தென்றல் நகர் பகுதியில் இயங்கி வரும் தனியாருக்குச் சொந்தமான ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

இயந்திரத்தை உடைக்க முடியாததால் அதிலிருந்து சுமார் ஐந்து லட்சம் ரூபாய் பணம் தப்பியது.

இந்தச் சம்பவம் குறித்து ஓசூர் அட்கோ போலீசார் மேற்கொண்ட விசாரணையில் ஏடிஎம்-இல் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா செயலிழந்த நிலையில், வெளியில் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை கொண்டு போலீஸார் ஆய்வு செய்தனர்.

அப்போது அதில் நள்ளிரவு சுமார் 2 மணியிலிருந்து அதிகாலை 4 மணிக்குள் 5 பேர் கொண்ட கும்பல் ஏடிஎம்-இல் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவை முதலில் செயலிழக்கச் செய்து பின்னர் உள்ளே சென்று ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வந்தது.

ஏடிஎம் எந்திரத்தை முழுமையாக உடைக்க முடியாததால் அதில் இருந்த சுமார் 5 லட்சம்
ரூபாய் பணம் தப்பியது. கண்காணிப்புக் கேமரா செயலிழந்த நிலையில் கொள்ளையில்
ஈடுபட்ட நபர்களை கண்டுபிடிப்பதில் போலீசார் திணறி வருகின்றனர்.

மேலும் அந்த பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் மற்றும் அருகாமையில் சிறு குறு
தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருவதால் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக
இருக்கிறது. அங்குள்ள சாலை சந்திப்பு மையப்பகுதியில் கண்காணிப்பு கேமரா
நிறுவப்பட்டால் இதுபோன்ற அசம்பாவிதங்களை தடுக்கலாம் என அப்பகுதி மக்கள்
கருத்து தெரிவிக்கின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.