புதிதாக தேர்வு செய்யப்பட்ட மதுரை, ஓசூர், கடலூர் உள்ளிட்ட மாநகராட்சி மேயர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
மதுரை மாநகராட்சி மேயராக இந்திராணி பொன்வசந்த் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து அவருக்கு, மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அவருக்கு, தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், மதுரை எம்பி. சு. வெங்கடேசன் ஆகியோர் வெள்ளி செங்கோல் வழங்கினர். மதுரை மாநகராட்சியின் 8 வது மேயராக பதவியேற்றுக் கொண்டுள்ள இந்திராணி பொன்வசந்த், மதுரை மாநகராட்சியின் 2 வது பெண் மேயர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓசூர் மாநகராட்சி மேயர் பதவிக்கான மறைமுக தேர்தலில், திமுக வேட்பாளர் சத்யா 9 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதையடுத்து, ஓசூர் மாநகராட்சியின் முதல் மேயராக சத்யா பதவியேற்றுக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உள்ளாட்சியில் நல்லாட்சி என்ற முதலமைச்சரின் வாக்கிற்கு இணங்க செயல்படுவேன் என தெரிவித்தார்.
நாகர்கோவில் மாநகராட்சியில் மேயர் பதவிக்கு திமுகவைச் சேர்ந்த மகேஷ், பாஜகவை சேர்ந்த மீனாதேவ் ஆகியோர் போட்டியிட்டனர். மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் தலைமையில்நடந்த வாக்கெடுப்பில், பாஜக வேட்பாளர் மீனா தேவ் விட மகேஷ் 4 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இதனையடுத்து, அவர் நாகர்கோவில் மேயராக பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு, தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வாழ்த்து தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








