காஞ்சிகோயில் அருகே உள்ள கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க முயற்சித்ததால் விவசாயிகள் விடிய விடிய காத்திருப்பு போராட்டம் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பவானி சாகர் அணையின் தண்ணீர், கடைமடை வரை சேரும் வகையில், கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்தது. இதற்கு ஒரு தரப்பு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து தொடர் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டனர்.
அவர்களிடம் அமைச்சர் முத்துசாமி பேச்சுவார்த்தை நடத்தியபோது, கீழ்பவானி வாய்க்காலில் பழுதடைந்த பழைய கட்டுமானத்தை மட்டுமே சீரமைக்க வேண்டும் என்றும், மண் கரையில் எவ்வித பணியும் மேற்கொள்ளக்கூடாது என்றும் விவசாயிகள் வலியுறுத்தினர்.
இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில் காஞ்சிகோயில் பகுதியில் மண் கரையாக உள்ள இடத்தில், கான்கிரீட் தளம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டதாக தெரிகிறது. இதனை கண்டித்து அப்பகுதி விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் காஞ்சிகோயில் கருங்கரடு பகுதியில் நல்ல நிலையில் எந்த விதமான உடைப்பு பழுதும் ஏற்படமால் மண் கரையாக உள்ள இடத்தில் அமைச்சரின்
உறுதிமொழியை மீறி இரவு நேரத்தில் பணிகள் தொடங்கியுள்ளனர். இதனை கண்டித்து கால்வாயில் இறங்கிய அப்பகுதி பாசன விவசாய பொதுமக்கள் 200- க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடைபெற்ற நிலையில் நல்ல நிலையில் இருந்த கால்வாயின் கரையை உடைத்த பகுதியை மீண்டும் அதே மண்ணை கொண்டு பலப்படுத்த வேண்டும் எனவும் கான்கிரீட் தளம் அமைக்க கூடாது எனவும் கூறி பேச்சு
வார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் விவசாயிகள் இரவிலும் காத்திருப்பு
போராட்டத்தில் ஈடுபட்டனர்.







