திருநங்கை ஜோடி மீது இளைஞர்கள் இரண்டு பேர் தாக்குதல் நடத்தியது போன்ற வீடியோ டிவிட்டரில் பரவியதையடுத்து, சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை சார்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் நாள்தோறும் வரும் செய்திகள் பெரும்பாலானோர் கவனத்திற்கு சென்று விடுகிறது. அதேபோல், சிலர் டிவிட்டர், முகநூல் வழியாகவே சம்மந்தப்பட்டவர்களுக்கு தகவல்களை பரிமாறி கொள்கின்றனர். மேலும் டிவிட்டர் வாயிலாக அளிக்கப்படும் புகார்கள் அரசு மற்றும் பல துறைகளுக்கு நேரடியாக செல்வதால், சில சமயங்களில் அதன் மீது நடவடிக்கை எடுத்து சம்மந்தப்பட்ட துறை அவர்களுக்கு பதிலளித்து வருவதையும் பார்க்க முடிகிறது. அந்த வகையில் தற்போது டிவிட்டரில் வீடியோ ஒன்று பரவி வருகிறது.
பானு என்ற திருநங்கை ஒருவர் பதிவிட்டுள்ள வீடியோவில், இரண்டு இளைஞர்கள் சேர்ந்து திருநங்கை ஜோடியை கடுமையாக தாக்குவது போன்று உள்ளது. மேலும் தலை முடியை பிளேடால் வெட்டுவது போன்ற அராஜகத்திலும் அந்த இளைஞர்கள் ஈடுபடுகின்றனர். அதில் ஒருவர் முகம் கடுமையாக தாக்கப்பட்டுள்ளது போன்றும் பதிவாகியுள்ளது. இதனை மற்றொரு இளைஞர் வீடியோ எடுக்கிறார்.
மேலும் இந்த வீடியோவை பதிவிட்ட பானு, தமிழ்நாடு காவல்துறை, திருநெல்வேலி, தூத்துக்குடி, சிவகங்கை, மதுரை காவல்துறைகளுக்கும் தெரியபடுத்தியுள்ளார். இதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சம்மந்தப்பட்டவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். இதனால் இந்த சம்பவம் எங்கு நடந்தது என்பது தெரியவில்லை.
இந்நிலையில், இந்த வீடியோ வைரலாக பரவியதையடுத்து, இதற்கு தெற்கு மண்டல காவல்துறை பதிலளித்துள்ளது. அதில், இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் உட்பட அனைவரும் அடையாளம் கண்டு இது தொடர்பாக சட்ட நடவடிக்கைகள் எடுத்து வருவதாக தெரிவித்துள்ளது. இந்த வீடியோவை நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்.
-இரா.நம்பிராஜன்









