ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இம்முறை இந்தியா சார்பில் 634 போட்டியாளார்கள் பங்கேற்று விளையாடவுள்ளது புதிய சாதனையாக பார்க்கப்படுகிறது.
சீனாவின் ஹாங்சோ நகரில் 19 வது ஆசிய விளையாட்டு போட்டிகள் இம்மாதம் 21ஆம் தேதி முதல் தொடங்கி, வரும் அக்டோபர் மாதம் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. ஆசிய விளையாட்டு சம்மேளனம் மற்றும் ஆசிய ஒலிம்பிக் சம்மேளனம் இனைந்து நடத்தும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆசியாவின் அனைத்து நாடுகளும் பங்கேற்று விளையாடுகின்றன.
இந்திய அளவில் இதுவரை இல்லாத எண்ணிக்கையிலான போட்டியாளர்கள் ஆசிய போட்டிகளில் பங்கேற்று விளையாடவுள்ளன. கடந்த 2010 இல் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா சார்பில் 625 பேர் பங்கேற்றிருந்ததே சாதனையாக பேசப்பட்ட நிலையில், இம்முறை இந்தியா சார்பில் 634 போட்டியாளார்கள் பங்கேற்று விளையாடவுள்ளனர்.
இந்திய ஒலிம்பிக் சம்மேளனத்திற்கு இந்திய வீரர்கள் 850 பேர் பரிந்துறைக்கப்பட்டிருந்ததை அடுத்து, 320 வீரர்கள், 314 வீராங்கனைகள் என மொத்தமாக 634 பேர் தேர்வு செய்யப்பட்டு விளையாட அனுப்பிவைக்கப்படவுள்ளனர். கடந்த முறை இந்தோனேசியாவில் நடைபெற்று முடிந்த தொடரில் இந்தியா இதுவரை இல்லாத அளவில் 16 தங்கம், 23 வெள்ளி, 31 வெண்கலம் என 70 பதக்கங்களை வென்று குவித்திருந்தது. எனவே இந்த முறை இந்தியர்கள் அதிக பதக்கங்களை வென்று நாடு திரும்புவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் முதல் முறையாக இந்த முறை கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது. மொத்தமாக 482 விளையாட்டு நிகழ்வுகள், 40 விளையாட்டு போட்டிகள், 61 களங்கள் என ஆசிய போட்டிகள் தீ பிடிக்க காத்துக் கொண்டிருக்கின்றன. ஆசிய விளையாட்டுப் போட்டிகள் கடந்த வருடமே நடத்த திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை பரவி வந்ததை அடுத்து, இந்த வருடத்திற்கு மாற்றி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
வில்வித்தை, பேட்மிண்டன், குத்துச்சண்டை, வாள் வீச்சு, ஹாக்கி, துப்பாக்கி சுடுதல், சதுரங்கம், தடகளம், கிரிக்கெட் என அனைத்திலும் வலிமை பெற்றுள்ள இந்தியா இம்முறை நிச்சயம் நிறைய பதக்கங்களுடன் நாடு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.







