ஆசிய விளையாட்டு ஆடவர் டி20 கிரிக்கெட் அரையிறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறியது. இந்த நிலையில், இன்று நிஷின் நகரில் உள்ள கரோகி ஸ்போர்ட்ஸ் பார்க் ஸ்டேடியத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில், நடப்பு சாம்பியனான ஷ்ரேயாஸ் தலைமையிலான இந்திய அணி, பாகிஸ்தானுடன் மோதியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். அதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடியது.
முதலில் களமிறங்கிய இந்திய அணி வீரர் வைபவ் சூர்யவன்ஷி 15 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் அதிரடியாக விளையாடிய அபிஷேக் ஷர்மா 28 பந்துகளில் 61 ரன்கள் குவித்தார். இதைத்தொடர்ந்து வந்த திலக் வர்மா 22 பந்துகளில் 51 ரன்கள் குவித்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். மேலும், ஷிவம் தூபே 15 பந்துகளில் 27 ரன்கள் குவித்தார். இறுதியில், இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் தரப்பில் அகமது மினஸ் மற்றும் அகமது டானியல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பாகிஸ்தான் பவுலர்களான சயீம் அபூப் மற்றும் அப்ரர் அகமது ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
இதைத்தொடர்ந்து பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான சாஹிப்சாதா ஃபர்ஹான், மாஸ் சதகத் ஆகியோர் நிதானமாக ஆட்டத்தைத் தொடங்கினர். இந்திய வீரர்களின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் திணறினர். இந்த நிலையில், சாஹிப்சாதா 10 ரன்களிலும், மாஸ் சதகத் 23 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதைத்தொடர்ந்து வந்த உஸ்மான் கான் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். இதைத்தொடர்ந்து கைகோர்த்த ஹசன் நவாஸ் மற்றும் சைம் ஆயும் கூட்டணி அதிரடியாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இந்த நிலையில், அதிரடியாக ஆடிய ஹசன் நவாஸ் 51 பந்துகளில் 96 ரன்கள் எடுத்த நிலையில், ஷிவம் தூபே பந்தில் ஆட்டமிழந்தார். இதைத்தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்திய அணி சார்பில் அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஷிவம் தூபே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இறுதியில், பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன் மூலம் இந்திய அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியது. இரண்டாவதாக வந்த பாகிஸ்தான் அணி வெள்ளிப் பதக்கம் வென்றது.
ஏற்கனவே மகளிர் கிரிக்கெட்டிலும் இந்தியா தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.




