ஜப்பானின் ஆய்ச்சி-நகோயாவில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் டி20 கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் இந்திய அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றது. தங்கம் வென்ற இந்திய அணிக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், “ஜப்பானில் நடைபெற்றுவரும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், ஆடவர் கிரிக்கெட் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய ஆடவர் அணிக்கும், அவ்வணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தரின் சாதனையைப் பாராட்டி, தமிழ்நாடு அரசின் சார்பில் உயரிய ஊக்கத்தொகையாக ரூ.75 இலட்சம் வழங்கப்படும். அவரது வெற்றி இளைய தலைமுறையினருக்கு புதிய உத்வேகத்தையும், நம்பிக்கையையும் அளிக்கும். வாஷிங்டன் சுந்தர் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன்!” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.




