முக்கியச் செய்திகள் விளையாட்டு

ஆஷஸ் டெஸ்ட்: 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸி. அபார வெற்றி

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடந்து வருகிறது. முதலாவது டெஸ்ட் போட்டி, பிரிஸ்பேனில் நடந்து வந்தது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, 147 ரன்னில் சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜாஸ் பட்லர் 39 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். பிறகு மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, 425 ரன்கள் குவித்தது. அந்த அணியில், வார்னர் 94 ரன்களும் டிராவிஸ் ஹெட் 152 ரன்களும் எடுத்தனர். இதனையடுத்து 278 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து அணி, தனது இரண்டாவது இன்னிங்ஸ்சை தொடங்கியது. கேப்டன் ஜோ ரூட் 89 ரன்களும் டேவிட் மலான் 82 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் நிலைத்து நிற்காமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் அந்த அணி 297 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.

ஆஸ்திரேலிய தரப்பில் சுழல் பந்துவீச்சாளர் நாதன் லியான் 4 விக்கெட்டுகளையும் கேமரான் கிரீன், பேட் கம்மின்ஸ் தலா 2 விக்கெட்டுகளையும் ஸ்டார்க், ஹசல்வுட் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதையடுத்து 20 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. அலெக்ஸ் கேரியும் மார்கஸ் ஹாரிஸும் களமிறங்கினர். கேரி 9 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் 5.1 ஓவரில் ஒரு விக்கெட்டை இழந்து 20 ரன்கள் எடுத்து, 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது.

ஜோ ரூட் சாதனை

இதற்கிடையே இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் இந்த ஆண்டில் 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இதுவரை 1,544 ரன்கள் எடுத்துள்ளார். இதன் மூலம் ஓராண்டில் அதிக ரன்கள் எடுத்த இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் 2002-ம் ஆண்டு 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1,481 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. அவரது சாதனையை ஜோ ரூட் முறியடித்துள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

தடுப்பூசி மையங்கள் இன்று இயங்காது: சென்னை மாநகராட்சி

Vandhana

புதுச்சேரி முன்னாள் எம்எல்ஏ லட்சுமிநாராயணன், என்.ஆர்.காங்கிரசில் இணைந்தார்

Jeba Arul Robinson

‘தி ஃபேமிலிமேன் 2’: மன்னிப்புக் கேட்டார் நடிகை சமந்தா

Gayathri Venkatesan