இலங்கையில் பொருளாதார நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில், இந்திய அரசு உதவ வேண்டும் என இலங்கைத் தமிழர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆசியாவின் அழகிய தேசமான இலங்கை நாளுக்கு நாள் பல இன்னல்களைச் சந்தித்துவருகிறது. அந்நாட்டில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் சென்றுக்கொண்டிக்கிறது. இலங்கையில் ஒரு கப் டீயின் விலை 100 ரூபாய்க்கும் ஒரு மூட்டையின் விலை 38 ரூபாய்க்கும் அதேபோல் சமையல் எரிவாயு சிலிண்டர் 5 ஆயிரம் ரூபாய்க்கும், சக்கரை ஒரு கிலோ 230 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெங்காயம், தக்காளி ரூபாய் 450க்கும், ஒரு கிலோ பச்சை மிளகாய் விலை ஆயிரம் ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இவ்வாறு தினந்தோறும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது.
கொரோனா பெருந்தொற்றால் இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைவு மற்றும் அரசின் பொருளாதார கொள்கையால் அந்நாட்டில் அந்நியச் செலாவணி கையிருப்பு குறையைத் தொடங்கியது. இதனால் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு சிலிண்டர், பால் பவுடர் மற்றும் உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதில் பற்றாகுறை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த பொருட்களை வாங்க மக்கள் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளது. குறிப்பாக பெட்ரோல் பங்க்குகள் முன்பு வாகனங்களுடன் பல மணிநேரம் கடும் வெயிலில் காத்திருக்கவேண்டியுள்ளது. இவ்வாறு பெட்ரோல் பங்க் முன்பு காத்திருந்த இருவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு வரிசையில் நின்றுகொண்டிருக்கும்போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவமும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக ஹோட்டல் நடத்த உரிமையாளர்கள் பலர் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். உணவுப் பொருட்களின் கடுமையான விலை உயர்வு மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக ஹோட்டல்களை இழுத்து மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.









