போதைப் பொருள் வழக்கு: ஷாருக்கான், நடிகை அனன்யா வீட்டில் அதிகாரிகள் சோதனை

போதைப் பொருள் வழக்கு தொடர்பாக, நடிகர் ஷாருக் கான் வீட்டுக்கு போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சென்றுள்ளனர். மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் கடந்த சில நாட்களுக்கு முன் போதைப்…

போதைப் பொருள் வழக்கு தொடர்பாக, நடிகர் ஷாருக் கான் வீட்டுக்கு போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சென்றுள்ளனர்.

மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் கடந்த சில நாட்களுக்கு முன் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு போதை விருந்து நடப்பது உறுதி செய்யப்பட்டது. அதில் கலந்துகொண்ட, நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆர்யன் கான் தற்போது ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேரும் தனித்தனியாக ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். அவர்களின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள மகன் ஆர்யன் கானை, சிறைசாலைக்குச் சென்று நடிகர் ஷாருக்கான் இன்று சந்தித்தார். இந்நிலையில், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் ஷாருக்கானின் ’மன்னட்’ பங்களாவுக்கு இன்று சென்றனர். அங்கு அவர்கள் சோதனை நடத்த சென்றதாகக் கூறப்பட்டது.

ஆர்யன் கான், அனன்யா பாண்டே

ஆனால், கைது செய்யப்பட்டுள்ள ஆர்யன் கான் தொடர்பான சில ஆவணங்களை சேகரிப்பதற்காகவே அவர் வீட்டுக்கு சென்றுள்ளதாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவு மண்டல இயக்குநர் சமீர் வாங்கடே தெரிவித்துள்ளார். இதற்கிடையே பிரபல இந்தி நடிகை அனன்யா பாண்டே வீட்டிலும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.