டெல்லிக்கு ஆக்சிஜன் கொண்டு வரும் லாரிகள் தடுக்கப்படுவதாக பிரதமர் நரேந்திரமோடியுடனான ஆலோசனையில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா தொற்றால் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் 10 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திரமோடி இன்று காலை ஆலோசனை மேற்கொண்டார். அப்போது டெல்லி மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசும்போது, டெல்லி மருத்துவமனைகளுக்கு போதுமான ஆக்சிஜன் இருப்பு கையிருப்பில் இல்லாததால் மோசமான பேரழிவு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளதாக கூறினார். எனவே, பிரதமரின் வழிகாட்டுதல்கள் தேவை என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
ஆக்சிஜன் கொண்டு வரும் டேங்கர் லாரிகள் டெல்லிக்குள் நுழைய விடாமல் தடுக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக டெல்லி மக்கள் பெரும் வேதனையில் தவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆக்சிஜன் பற்றாக்குறையால் பெரும் பேரழிவு நடைபெறும் பட்சத்தில் ஒரு போதும் நமக்கு மன்னிப்பே கிடையாது என்றும் ஆவேசமாக கூறினார். எனவே, தான் பிரதமரை கைகூப்பிக் கேட்டுக் கொள்வதாக உருக்கமாக பேசிய அவர், டெல்லிக்குள் தடையின்றி ஆக்சிஜன் லாரிகள் நுழைய முதலமைச்சர்களுக்கு பிரதமர் மோடி உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.







