அரும்பாக்கம் தனியார் வங்கியில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் மேலும் ஒருவரை காவல்துறையினர் கைது செய்து, அவரிடமிருந்து 18 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பெட் வங்கி கிளையில் நேற்று முன்தினம் 32 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. பட்டபகலில் நடந்த இந்த கொள்ளை குறித்து அரும்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பின்னர் அங்கு சென்று விசாரணை நடத்திய போது, வங்கி கிளை காவலாளி மற்றும் மேலாளர், அங்கு பணியாற்றும் பெண் ஊழியர் ஆகியோருக்கு குளிர்பானத்தில் மயக்கமருந்து கலந்து கொடுத்து இந்த கொள்ளை அரங்கேறியது தெரியவந்தது.
மேலும், அதே வங்கி கிளையில் பணியாற்றும் முருகன் என்ற ஊழியர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொள்ளையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, போலீசார் தனிப்படை அமைத்து முருகன் மற்றும் அவரது கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.
இதனிடையே, வங்கி கொள்ளையில் ஈடுபட்ட முருகனின் கூட்டாளிகளான பாலாஜி, சந்தோஷ் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் வங்கியில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் அவர்களிடம் இல்லாததால் நேற்று ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். ரியல் எஸ்டேட் அதிபரான செந்தில் குமார் என்பவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து 18 கிலோ தங்க நகைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். ஏற்கனவே கைது செய்யப்பட்ட சந்தோஷ், நகைகளை செந்தில்குமாரிடம் கொடுத்து விற்க சொன்னது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் முக்கிய குற்றவாளி முருகன் கைது செய்யப்பட்ட பிறகு மீதமுள்ள நகைகள் மீட்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, குற்றவாளியை பிடிக்கும் காவலருக்கும், துப்பு கொடுக்கும் பொதுமக்களுக்கும் ஒரு லட்சம் ரூபாய் வெகுமதி வழங்கப்படும் என காவல்துறை தரப்பில் அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
– இரா.நம்பிராஜன்








