திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தநாரீசுவரர் வைகாசி விசாகத் தேர் திருவிழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் உலக பிரசித்தி பெற்ற
அர்த்தநாரீஸ்வர் திருக்கோயில் வைகாசி விசாகத் தேர்திருவிழா, கடந்த
25.05.2023 முதல் கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடந்து வருகிறது.
14 நாட்கள் நடக்கும் இந்த விழாவின் 10வது நாள் நிகழ்ச்சியாக, அர்த்தநாரீஸ்வர்
திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
மேலும், திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி, அறங்காவலர் குழு தலைவர்
தங்கமுத்து, இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் ரமணிகாந்தன்
மற்றும் திருச்செங்கோடு டிஎஸ்பி இமயவரம்பன் வடம் பிடித்து தேர் இழுக்கும்
நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். வைகாசி விசாகத்தேர் திருவிழா பல பகுதிகளில்
நடக்கும் என்றாலும், திருச்செங்கோட்டில் இந்த திருவிழா 14 நாட்கள் நடக்கும்.
மேலும், மற்ற ஊர்களில் எல்லாம் ஒரு நாள் தேர் இழுப்பார்கள். ஆனால்,
திருச்செங்கோட்டில் மட்டும் மூன்று நாட்கள் அர்த்தநாரீஸ்வர் தேர் வடம் பிடிக்கும்
நிகழ்ச்சி நடக்கும். சுற்று வட்டாரத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள்
இணைந்து கொண்டாடும் இந்த திருவிழா, திருச்செங்கோடு பகுதியில் தீபாவளி,
பொங்கல்,பண்டிகைகளை விட சிறப்பாக கொண்டாடப்படும்.
ஆயிரக்கணக்கானவர்கள் இந்த தேர்திருவிழாவில் கலந்து கொண்டு அம்மையப்பனை வழிபட்டனர். மேலும், தேர்திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பலதரப்பினரும் அன்னதானம் வழங்கினர்.
—கு. பாலமுருகன்







