ஒடிசாவில் ரயில் விபத்து நிகழ்ந்த இடத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேரில் ஆய்வு செய்தார்.
கொல்கத்தா- சென்னை இடையே தினசரி விரைவு ரயிலாக கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை செயல்பட்டு வருகிறது. இந்த ரயில் மேற்கு வங்காளம், ஒடிசா, ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய நான்கு மாநிலங்களின் இணைக்கும் விதமாக இதன் வழித்தடம் அமைந்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் கோரமண்டல் ரயில் வண்டி எண் 12841 நேற்று மாலை 3:30 வழக்கம் போல மேற்கு வங்க மாநிலம் சாலிமரிலிருந்து புறப்பட்டது. இந்த ரயில் இன்று மாலை 4:50க்கு சென்னை வந்து சேரும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த ரயில் மேற்கு வங்க மாநிலத்தை கடந்து ஒரிசாவின் பஹனகா ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருக்கும் போது சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின்போது ரயில் நேருக்கு நேர் மோதியதில் இரயிலின் பெட்டிகள் தடம் புரண்டது.
கோரமண்டல் ரயில் விபத்துக்குள்ளானதில் கிட்டத்தட்ட 10 முதல் 12 பெட்டிகள் தடம்புரண்டு பக்கத்து தண்டவாளத்தில் விழுந்தன. இதனால் அந்த தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்த யஷ்வந்த்பூர் ரயில் தடம்புரண்ட பெட்டிகள் மீது மோதியதால் அந்த ரயிலும் தடம்புரண்டது. இந்த விபத்தில் 280 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 900 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதை தொடர்ந்து ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட குழு ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ரயில் விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து பிரதமருக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
இந்நிலையில், ரயில் விபத்து நடந்த பகுதியை பிரதமர் நரேந்திர மோடி நேரில் ஆய்வு செய்தார். அவருடன் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மற்றும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் உடனிருந்தனர். அதன்பின் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்க பிரதமர் நரேந்திர மோடி மருத்துவமனைக்குப் புறப்பட்டு சென்றார்.