கணவன் கொலை; நாடகமாடிய மனைவி கைது, வெளியான அதிர்ச்சித் தகவல்

சங்கரன்கோவில் அருகே கணவரைத் தீர்த்துக் கட்ட ரூபாய் 5 லட்சம் பேரம் பேசிய வழக்கில் வழிப்பறி கும்பல் தேடப்பட்டு வந்த நிலையில், திடீர் திருப்பமாக மனைவி உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தென்காசி…

சங்கரன்கோவில் அருகே கணவரைத் தீர்த்துக் கட்ட ரூபாய் 5 லட்சம் பேரம் பேசிய வழக்கில் வழிப்பறி கும்பல் தேடப்பட்டு வந்த நிலையில், திடீர் திருப்பமாக மனைவி உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வென்றிலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வைரவசாமி மற்றும் முத்துமாரி தம்பதியர். இருவரும் வீரசிகாமணியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இருவரும் ஒரே இடத்தில் பணிபுரிவதால் ஒரே இரு சக்கர வாகனத்தில் பணிபுரியும் இடத்திற்குத் தினமும் சென்று வருவது வழக்கம். இந்நிலையில், சம்பவத்தன்று இரவு இருவரும் பணி முடிந்து இரு சக்கர வாகனத்தில் வீரசிகாமணியில் இருந்து வென்றிலிங்கபுரத்திற்கு சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, அவ்வழியாக காரில் வந்த மர்ம கும்பல் ஒன்று வைரவசாமி – முத்துமாரி தம்பதியினரை வழி மறித்ததாகக் கூறப்பட்டது. மேலும், வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் முத்துமாரி கழுத்தில் அணிந்திருந்த சுமார் 30 கிராம் நகைகளைப் பறித்ததாகக் கூறப்பட்டது. அப்போது, வைரவசாமிக்கும் வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம கும்பலுக்கும் கைகலப்பு ஏற்பட வைரவசாமி சரமாரியாகத் தாக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

பின்னர் காரில் வந்த மர்ம கும்பல் முத்துமாரியின் நகைகளுடன் தப்பிச் சென்றதாகக் கூறப்பட்டது. இது குறித்து அவ்வழியாகச் சென்றவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த சேர்ந்தமரம் காவல்துறையினர் வைரவசாமியின் உடலை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், காரில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் குறித்தும்,
கொலைக்கான பின்னணி குறித்தும் சேர்ந்தமரம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையின் போது சம்பவம் நடந்த இடத்தில் காவல்துறையினருக்குக் கிடைத்த தடயங்களும் முத்துமாரியின் வாக்குமூலமும் முன்னுக்குப் பின் முரணாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், சந்தேகம் அடைந்த காவல்துறையினர் முத்துமாரியைக் காவல் நிலையம் அழைத்து வந்து கிடுக்கு பிடி விசாரணை நடத்தியுள்ளனர். அதில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது. அதில் முத்துமாரியும் வீரசிகாமணி பகுதியைச் சேர்ந்த இசக்கி முத்து என்பவரும் முத்துமாரி வைரவசாமி திருமணத்திற்கு முன்பு 9 வருடங்கள் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், முத்துமாரி மற்றும் இசக்கி முத்து வெவ்வேறு சமூகம் என்பதால் இருவர் வீட்டிலும் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால், அதன் பின்னர் முத்துமாரி பணிபுரிந்து வந்த நிறுவனத்தில் ஏற்கனவே பணியிலிருந்த வைரவசாமியுடன் நெருக்கம் ஏற்பட்டு காதலாகியுள்ளது.

இருவரும் ஒரே சமூகம் என்பதால் இரு வீட்டார் இணைந்து திருமணம் செய்து வைத்துள்ளனர். ஆனால், வைரவசாமி முத்துமாரி தம்பதியினருக்கு மணமான பின் ஒத்துப் போகாத காரணத்தினால் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும், திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. இதில் விரக்தி அடைந்த முத்துமாரி, வைரவசாமியின் 30 இலட்ச ரூபாய் வீட்டை தன் பெயரில் மாற்றி எழுதித் தரக் கூறி வற்புறுத்தியுள்ளார். மேலும், எழுதிக் கொடுத்த பின்னர் வைரவசாமியை கொலை செய்யத் திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி, சில தினங்களுக்கு முன்னர் வைரவசாமியிடம் வெற்று பத்திரத்தில் கையெழுத்து வாங்கிவிட்டு கூலிப்படை வைத்து கொலை செய்யத் திட்டம் தீட்டியுள்ளார் முத்துமாரி. இந்நிலையில், தற்போது கட்டிடத் தொழிலாளியாக பணிபுரிந்து வரும் முன்னாள் காதலன் இசக்கிமுத்து நினைவிற்கு வரவே அவருடன் மீண்டும் தொடர்பை உருவாக்கி அவருடன் சில சமயம் உல்லாசமாக இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது. பின்னர் முத்துமாரி இசக்கிமுத்துவிடம் “முன்பணமாக ரூபாய் 50,000 தருகிறேன், என் கணவர் வைரவசாமியை கொன்றுவிடு, என் 1.5 இலட்சம் மதிப்புள்ள நகைகளை நீயே வைத்துக்கொள்” மேலும், என் கணவர் இறந்த பின் தான் சென்னை சென்று செய்தி வாசிப்பாளராக பணிபுரிய இருப்பதாகவும் சென்னை சென்று 3 இலட்ச ரூபாயைத் தருவதாகவும் கூறி, சொந்த கணவரின் உயிருக்கு 5 இலட்ச ரூபாய் பேரம் பேசியுள்ளார்.

முத்துமாரியின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கிய கட்டிடத் தொழிலாளி இசக்கிமுத்து தன்னுடன் பணிபுரியும் அங்குராஜ் மற்றும் காளிராஜை உதவிக்கு அழைத்து பங்கு தருவதாகக் கூறி வைரவசாமியை கொலை செய்ய முத்துமாரியின் உதவியுடன் திட்டம் தீட்டியுள்ளனர். இந்நிலையில், சம்பவத்தன்று (19.08.2022) வைரவசாமி முத்துமாரி பணி முடிந்து வென்றிலிங்கபுரம் செல்லும் வழியில் இயற்கை உபாதைக்காக எனக் கூறி கணவரைப் பிரதான சாலையிலிருந்து மணல் பாதைக்கு அழைத்துச் சென்றுள்ளார் முத்துமாரி. அப்போது, அங்கே மறைந்திருந்த முன்னாள் காதலன் இசக்கி முத்து மற்றும் அவனது கூட்டாளிகள் வைரவசாமியை உருட்டுக் கட்டைகளால் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் தலையில் பலத்த காயமடைந்த வைரவசாமி இரத்த வெள்ளத்தில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அண்மைச் செய்தி: ‘‘இளைஞர்கள் அக்னிபத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’ – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்’

பின்னர் கள்ளக்காதலன் மற்றும் கூட்டாளிகள் கொலை செய்து விட்டுத் தப்பி ஓடிய பின்னர் வழிப்பறி கொள்ளையால் நடந்த கொலை என்பன போன்ற நாடகங்களை முத்துமாரி அரங்கேற்றியுள்ளார். ஆனாலும் காவல்துறையினரின் கிடுக்குபிடி விசாரணையால் இந்த கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மேலும், முத்துமாரி கொடுத்த தகவலின் அடிப்படையில் கள்ளக்காதலன் மற்றும் அவனது கூட்டாளிகள் என மூன்று பேருக்கும் காவல்துறையினர் வலைவீசிய போது மூவரும் வீரசிகாமணி அருகே உள்ள மலைக்குன்று ஒன்றில் பதுங்கியிருப்பது தெரிய வந்தது. உடனடியாக அவர்கள் மூவரையும் பிடித்த காவல்துறையினர் வைரவசாமியின் மனைவி முத்துமாரி, கள்ளக்காதலன் இசக்கிமுத்து, கூட்டாளிகள் காளிராஜ் மற்றும் அங்குராஜ் ஆகிய நால்வரையும் கைது செய்துள்ளனர்.

மேலும், ஜூன் 2021-ல் இசக்கிமுத்து தந்தையை அரிவாளால் வெட்டிய வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. சேர்ந்து வாழ விரும்பாத மனைவி கள்ளக்காதலனைக் கூலிப்படையை மாற்றி கணவனின் உயிருக்குப் பேரம் பேசி தீர்த்துக்கட்டிய சம்பவம் சங்கரன்கோவில் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.