கோவை அருகே வயலில் மேய்ந்து கொண்டிருந்த எருமை மாடுகள் மீது மர்ம நபர்கள் ஆசிட் வீசியதில் 20-க்கும் மேற்பட்ட எருமைமாடுகள் படுகாயம் அடைந்தன.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கல்லாறு பகுதியில் கால்நடை வளர்ப்போர் அதிக அளவில் எருமை மாடு மற்றும் பசுமாடுகளை வளர்த்து வருகின்றனர். இதில் மேட்டுப்பாளையம் ரயில்வே கேட் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் இங்கு நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இங்கு 40 எருமை மாடுகளை வளர்த்து, பால் கறந்து விற்பனை செய்து வருகிறார்.
இந்த நிலையில், இவரது எருமை மாடுகளை மேய்ச்சலுக்கு விடும் போது எருமைகள் மீது யாரோ சிலர் ஆசிட் ஊற்றியுள்ளனர். இதனால் 20 க்கும் மேற்பட்ட எருமைகள் படுகாயம் அடைந்துள்ளன. தாய், கன்று என அனைத்து கால்நடைகளுக்கும் தலை பகுதி, முதுகு, கால் என அனைத்து பகுதிகளிலும் காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த கால்நடை பராமரிப்பு துறையினர் மற்றும் வருவாய்த்துறை, காவல்துறையினர் அங்கு விரைந்து வந்தது விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் உணவு உட்கொள்ள முடியாமல் அவதிப்பட்டு வரும் நிலையில் எருமை மாடுகளுக்கு தீவிர மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது குறித்து மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில், புளுகிராஸ் மற்றும் மாவட்ட கால் நிர்வாகம் இந்த கொடூர செயலில் ஈடுபட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
– இரா.நம்பிராஜன்








