எஸ்.ஐ.ஆர். விவகாரத்தில் இரு தேர்தல் ஆணையர்களின் ஒப்புதலின்றி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ஒருதலைப்பட்சமாக முடிவுகளை எடுத்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து, ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர் அமைப்பினர், ஆம் ஆத்மி கட்சியினர் உள்ளிட்டோர் போராடி வருகின்றனர். அதேபோல, மும்பையில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
இதனிடையே, இன்று ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரியும், அவர் தன்னிச்சையாக எடுத்த முடிவுகளுக்குத் தடை விதிக்கக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள், இதுகுறித்து பதிலளிக்க தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
இந்த நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையரைக் கைது செய்ய வேண்டும் என்று சிபிஐ(எம்) மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “புதிய வாக்காளர்களைச் சேர்ப்பதற்கான ஆன்லைன் படிவம் 6-ல் மேற்கொள்ளப்பட்ட மாற்றம் சட்டவிரோதம் என இரண்டு தேர்தல் ஆணையர்களும் பதிவு செய்துள்ளனர். அதையும் மீறித்தான் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் படிவம் 6-ஐத் திருத்தியுள்ளார்.
இவ்விவகாரம் குறித்து செப்டம்பர் 26-ஆம் தேதி இந்தியத் தேர்தல் ஆணையம் அளித்த விளக்கத்தில், படிவம் 6-ல் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை உச்ச நீதிமன்றம் தனது முந்தைய உத்தரவுகளில் ஏற்றுக்கொண்டுள்ளதாகக் கூறப்பட்டிருந்தது.
ஆனால், இன்று நடந்த வழக்கு விசாரணையில், படிவம் 6-ல் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு நாங்கள் ஒப்புதல் அளிக்கவில்லை என உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியே திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே பல்வேறு தளங்களில் அம்பலப்பட்ட ஞானேஷ் குமார், இன்று உச்ச நீதிமன்றத்திலும் அம்பலப்பட்டுள்ளார். பல லட்சம் இந்தியர்களின் வாக்களிக்கும் உரிமையைத் திருடிய இக்குற்றம் தேசத்துரோகத்துக்கு நிகரானது. இக்குற்றத்திற்காக அவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.




