தமிழக அரசின் பல்வேறு துறைகள் மற்றும் அரசு பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்களுக்கு டி.என்.பி.எஸ்.சி. மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், 2026-ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையில் இடம்பெற்றுள்ள குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு நாளை வெளியாக உள்ளது. இதற்கான எழுத்துத் தேர்வு டிசம்பர் 20-ந் தேதி நடைபெறுகிறது.
குரூப்-4 தேர்வில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் (கிரேடு-3), கிராம நிர்வாக அலுவலர், வரைவாளர், பில் கலெக்டர், வனக்காவலர் உள்ளிட்ட பல்வேறு பணிகள் இடம்பெறும். இதனிடையே, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் உள்ள காலிப்பணியிடங்களையும் டி.என்.பி.எஸ்.சி. மூலம் நிரப்புவதற்கு அண்மையில்
அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதனால் நகர்ப்புற உள்ளாட்சிகளில் உள்ள குரூப்-சி பணியிடங்களும் குரூப்-4 தேர்வு வரம்புக்குள் வர உள்ளன. எனவே, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு தேர்வர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
குரூப்-4 பணிகளுக்கு பொதுவாக 10-ம் வகுப்பு தேர்ச்சி அடிப்படை கல்வித்தகுதியாக உள்ளது. இருப்பினும், பட்டதாரிகள் மற்றும் முதுகலை பட்டதாரிகளும் அதிகளவில் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்து வருகின்றனர். தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட குறிப்பிட்ட பணிகளுக்கு கல்வித் தகுதியுடன் தொழில்நுட்பத் தேர்ச்சியும் தேவைப்படுகிறது.




