அமமுக பொதுச்செயளாலர் டிடிவி தினகரன் இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “பணிப் பாதுகாப்பு, பணி நிரந்தரம், சம வேலைக்குச் சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த செவிலியர்கள் நேற்று இரவோடு இரவாக காவல்துறையினரால் வலுக்கட்டாயமாகக் கைது செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தங்களின் உரிமைகளுக்காக நியாயமான முறையில் போராடி வரும் செவிலியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டிய தவெக அரசு, காவல்துறையை ஏவல்துறையாக மாற்றி, போராட்டக் களத்தில் மின்சாரத்தைத் துண்டித்தும், பந்தல்களை அகற்றியும், போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களுக்குக் காயம் ஏற்படும் அளவிற்கு அவர்களை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றும் அராஜகப் போக்கில் ஈடுபட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
முறையான முன் அனுமதி பெற்று அமைதியான முறையில் போராடிக் கொண்டிருந்த செவிலியர்களின் பிரதிநிதிகளைப் பேச்சுவார்த்தை எனும் பெயரில் அழைத்துச் சென்று, அவர்களைக் கைது செய்து மண்டபத்தில் அடைத்து வைத்திருந்தது செவிலியர்களுக்கு தவெக அரசு இழைத்திருக்கும் மாபெரும் துரோகமாகும்.
தேர்தலுக்கு முன்பு போராட்டக் களத்திற்குச் சென்று ஆதரவு தெரிவித்து, தங்களது தேர்தல் அறிக்கையில் செவிலியர்களைப் பணி நிரந்தரம் செய்வோம் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, தற்போது ஆட்சிக்கு வந்ததும் அதே கோரிக்கையை முன்வைத்துப் போராடி வரும் செவிலியர்களை காவல்துறையை வைத்து அடக்கி ஒடுக்குவதும், போராட்டக் களத்தில் இருந்த செவிலியர்களைப் பார்த்து காவலர் ஒருவரே, “வேண்டாம், உங்க உயிர் முக்கியம்” என மிரட்டுவதும், சினிமாவில் தான் ஹீரோ; நிஜத்தில் தான் ஒரு வில்லன் என்பதை முதலமைச்சர் விஜய் தெரிவிக்க முற்படுகிறாரா? என்ற கேள்வியை எழுப்புகிறது.
எனவே, கொரோனா போன்ற பெருந்தொற்றுக் காலத்தில் தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் பொதுமக்களின் உயிரைக் காக்க முன்களத்தில் நின்று பணியாற்றிய செவிலியர்களின் பணிப் பாதுகாப்பு, பணி நிரந்தரம், சம வேலைக்குச் சம ஊதியம் உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளைப் பேச்சுவார்த்தையின் மூலம் நிறைவேற்றிட முன்வர வேண்டும்என தவெக அரசை வலியுறுத்துகிறேன்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.




