வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விவகாரத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் மற்ற இரண்டு தேர்தல் ஆணையர்களின் ஒப்புதல் இன்றி தனித்து செயல்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதனைத் தொடர்ந்து, ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர் அமைப்பினர், ஆம் ஆத்மி கட்சியினர் உள்ளிட்டோர் போராடி வருகின்றனர். அதேபோல, மும்பையில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
இதனிடையே, இன்று ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரியும், அவர் தன்னிச்சையாக எடுத்த முடிவுகளுக்குத் தடை விதிக்கக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள், இதுகுறித்து பதிலளிக்க தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
இந்த நிலையில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி, இந்தியா கூட்டணி அணி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்திலிருந்து இந்தியத் தேர்தல் ஆணையம் வரை பேரணியாக சென்றனர். இதில் எதிர்க்கடசித் தலைவர் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, விசிக தலைவர் திருமாவளவன், சு.வெங்கடேசன், துரைவைக்கோ உள்ளிட்ட எம்.பிக்கள் கலந்துகொண்டனர்.
பேரணியாகச் சென்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் இருதரப்பிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேரிகார்டு மீது ஏறி ஞானேஷ்குமார் பதவி விலக கோரி முழக்கங்களை எழுப்பினார். இதனைத்தொடர்ந்து தடுப்புகளை தாண்டிச்சென்ற எம்.பிக்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் ஆணைய அலுவலகத்திற்குள் நுழைய முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்.பிக்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.




