திமுக எம்.எல்.ஏ கைது நடவடிக்கை; பேரவைத் தலைவர் விதி மீறியுள்ளார் – நயினார் நாகேந்திரன்

சட்டமன்ற உறுப்பினர் கைதுக்கு என்னுடைய அனுமதி தேவையில்லை என்று சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக முதல்வர் திரு.ஜோசப் விஜய் அவர்களின் எலும்புகளை முறித்துவிடுவதாக விளாத்திக்குளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் பேசியதாக அவரை தமிழக காவல்துறை கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, அவர்மீது பொய்வழக்கு போடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதை நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும். இந்த கைது நடவடிக்கை குறித்து பேசிய சட்டமன்ற பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகரன் அவர்கள், சட்டமன்ற உறுப்பினரை கைதுசெய்ய என்னுடைய அனுமதி தேவையில்லை என்று கூறியுள்ளார். இது சட்டமன்ற மரபுகளுக்கும், நாடாளுமன்ற விதிமுறைகளுக்கும், முரணானது, தவறானது.

உதாரணத்திற்கு, முன்னாள் பிரதமர் திருமதி. இந்திரா காந்தி அவர்கள் கைது செய்யப்பட்டபோது, அன்றைக்கு நாடாளுமன்ற தலைவரிடம் அனுமதி பெற்றுதான் அன்றைய பிரதமர் மொராஜிதேசாய் அரசு அவரை கைது செய்தது. நாடாளுமன்ற நெறிமுறைகள், பிரிட்டிஸ் “Erskine May” “மே” உடைய நெறிமுறைகளுக்கு ஒப்ப இந்திய நாடாளுமன்ற முறையும் இருக்கிறது.
இந்திய நாடாளுமன்ற முறைக்கு அடிப்படையாக ஹவுலாண்ட் – சத்தர் (Kowl and Shaddar) கோட்பாடுகள்படி எந்த நாடாளுமன்ற உறுப்பினரோ, சட்டமன்ற உறுப்பினரோ கைது செய்யப்படும்போது, குறைந்தபட்சம் சம்மந்தப்பட்ட அவைத் தலைவருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்பது மரபு மட்டுமல்ல, விதிமுறைகளும் ஆகும். இதை மறந்துவிட்டு, தமிழ சட்டமன்ற பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகரன் அவர்கள் துலாக்கோல் போல் நடுநிலமையில் இல்லாமல் ஆளும் கட்சிக்கு சாதகமாக, சட்டமன்ற உறுப்பினர் கைதுக்கு என்னுடைய அனுமதி தேவையில்லை என்று பேசியிருப்பது கண்டனத்திற்குரியது.

சட்டமன்ற பேரவைத் தலைவர் நடுநிலையோடு தனது அலுவல் பணிகளை செய்வதுதான் நாடாளுமன்ற முறையின் அடிப்படை கூறாகும். இதைப்போல, தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் மீது குற்றச்சாட்டுகள் இருந்தும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தவறியது ஏன்?
இனியாவது நாடாளுமன்ற நடைமுறைகளை பேரவைத்தலைவர் கடைபிடித்து, “ஓர்ந்துகண்ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும் தேர்ந்துசெய் வஃதே முறை.” என்ற வள்ளுவப்பெருமானின் வாய்மொழிக்கேற்ப, சட்டப்பேரவைத் தலைவர் நடுநிலையோடு செயல்பட வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.