காஷ்மீரில் ராணுவ வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
இந்தியாவில் கடந்த சில வடமாநிலங்களில் கடுமையான பனிப்பொழிவு மற்றும் அடர் மூடுபனி காணப்படுகிறது. டெல்லி, அரியானா, உத்தரபிரதேசம், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் கடும் மூடுபனி காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதித்துள்ளது.
இதேபோல் மலைபிரதேச மாநிலங்களாக ஜம்மு காஷ்மீர், ஹிமாச்சலபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கடுமையான பனிப்பொழிவு காணப்படுகிறது. இந்த கடுமையான பனிப்பொழிவிலும், ராணுவ வீரர்கள் தங்களின் வழக்கமான பணிகளை தொடர்ந்து நாட்டுக்கு சேவையாற்றி வருகின்றனர். கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஜம்முவில் கர்ப்பிணி பெண் ஒருவரை மருத்துவமனைக்கு சுமார் 5 கி.மீ. தூரம் சுமந்து சென்றனர்.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் குப்வாரா மாவட்டத்தில் மாச்சல் என்ற பகுதியில் ராணுவ வாகனத்தில் சென்றபடி இன்று வழக்கமான ரோந்து பணிகளை ராணுவ வீரர்கள் மேற்கொண்டனர். ஒரு இளநிலை அதிகாரி உள்பட மூன்று ராணுவ வீரரகள் இதில் பயணித்தனர். இவர்கள் சென்ற வாகனம், பனியில் சருக்கி ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் வாகனத்தில் பயணித்த மூவரும் உயிரிழந்ததாகவும், அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் நைப் சுபேதார் பர்ஷோதம் குமார், ஹவில்தார் அம்ரிக் சிங் மற்றும் சிப்பாய் அமித் சர்மா ஆகியோர் உயிரிழந்தனர். இதே பகுதியில் இதே போன்ற நிகழ்வு நடந்து இரண்டு மாதங்கள்கூட ஆகாத நிலையில், இந்த விபத்து நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.







