“மூன்றாம் உலகப் போர் வராது ” என உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
2023-ஆம் ஆண்டுக்கான ஹாலிவுட்டின் 80வது கோல்டன் குளோப்ஸ் விருது வழங்கும் நிகழ்ச்சி, நேற்று இரவு (ஜனவரி 10) அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. நிகழ்ச்சியை நகைச்சுவை நடிகர் ஜெரோட் கார்மைக்கேல், தொகுத்து வழங்கினார்.
மிகவும் கோலாகலமாக நடைபெற்ற இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் நிகழ்வில் பல்வேறு நாடுகளை சேர்ந்த திரைப்பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். இதில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அவர்களும் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டடார்.
அந்த விருது வழங்கும் விழா மேடையில் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி பேசுவதற்கான நேரம் வந்து மேடையேறி பேசியபோது, ரஷ்யாவுடனான போர் மோதல் குறித்தும், யார் வெற்றி பெறப்போகிறார்கள் என்பது குறித்தும் விளக்கமளித்தார்.
அப்போது பேசிய அவர், இன்னும் ரஷ்யா உடனான போர் முடிவுக்கு வரவில்லை. அவர்களுடன் இன்னும் சில சண்டைகள் உள்ளன. சுதந்திர உலகின் உதவியுடன் “எங்கள் நாட்டின் மீதான ஆக்கிரமிப்பு போரை ரஷ்யாவே நிறுத்தும்” என்று கூறிய அவர், “யார் வெற்றி பெறுவார்கள் என்பது ஏற்கனவே தெளிவாகிவிட்டது” என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், 1943 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போர் முடிவடையும் தருவாயில் இருந்தபோது இந்த விருது நிகழ்ச்சி உருவானது என்றும், யார் வெல்வார்கள் என்பது தெளிவாகத் தெரியும், ஆனால் இன்னும் சில சண்டைகள் உள்ளன என்றும் தனது உரையின் தொடக்கத்தில் ஜெலென்ஸ்கி சுட்டிக்காட்டினார்.
மேலும் “முதல் உலகப் போர் மில்லியன் கணக்கான உயிர்களைக் கொன்று விட்டது. இரண்டாம் உலகப் போர் கோடிக்கணக்கான மக்களைக் கொன்று விட்டது . மூன்றாம் உலகப் போர் நிச்சயம் இருக்காது, இது ஒரு முத்தொகுப்பு அல்ல” என்று கூறினார்.
உக்ரைனின் சுதந்திரத்தை ஆதரித்த அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்த அவர், “சுதந்திரம், ஜனநாயகம், வாழ்வதற்கான உரிமை, நேசிக்கும் உரிமைக்கான எங்கள் போராட்டம்” என்பது பொதுவான ஒன்று. அது விரைவில் ஒன்றுபடும் என்றும் பேசினார்.











