முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

அதிமுகவில் இபிஎஸ்க்குதான் அதிக செல்வாக்கு- அவைத்தலைவர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வாதம்

அதிமுகவில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்குத்தான்,  அதிக செல்வாக்கு உள்ளதாக உச்சநீதிமன்றத்தில் அக்கட்சியின் அவைத் தலைவர் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. 

கடந்த ஆண்டு ஜூலை 11ந்தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி, அக்கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமர்வு முன்பு இன்று அதிமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், வாதங்களை எடுத்துரைத்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

”ஜனநாயக அடிப்படையில், பலம் பொருந்திய ஒரு எதிர்க்கட்சியை செயல்படவிடாமல் ஓபிஎஸ் தரப்பு தடுப்பதை ஏற்க முடியாது. பொதுக்குழு விவகாரத்தில் அனைத்தும் உரிய நடைமுறைப்படிதான் நடைபெற்றது, எனவேதான் அதனை சென்னை உயர்நீதிமன்ற டிவிசன் அமர்வும் ஏற்று உத்தரவு பிறப்பித்தது. ஆனால் கட்சியில் எந்த ஆதரவும் இல்லாத ஒருவர் தற்போது பொதுக்குழு கூட்டத்தையும், அதன் முடிவையும் எதிர்ப்பது அடிப்படையற்றது” என ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு எதிராக அதிமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் வைத்தியநாதன் வாதங்களை எடுத்துரைத்தார்.

நிர்வாக ரீதியிலான சிக்கல்களை ஏற்படுத்துவதாகவே இந்த வழக்குகள் இருக்கின்றன என்றும்  ஜூலை 11க்கான பொதுக்குழு கூட்டம் அவைத்தலைவரால் அறிவிக்கப்பட்டு நடத்தப்பட்டதுதான் என்றும் அதிமுக தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டன.

”அவைத்தலைவராக தமிழ்மகன் உசேனை நியமித்தது ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கினைப்பாளர் சேர்ந்து தான். பொதுக்குழு உறுப்பினர்கள் எவரும் கூட்டம் தொடர்பாக தங்களுக்கு உரிய நோட்டீஸ் வழங்கப்படவில்லை என புகார் கூறவில்லை. ஜூன் 23ம் தேதி பொதுக்குழு கூட்டத்தில்தான் அடுத்த பொதுக்குழு ஜூலை 11ந்தேதி  நடைபெறும் என்ற அறிவிப்பை அவைத்தலைவர் வெளியிட்டார். அப்போது அனைவரும் அங்கு இருந்தனர். கட்சியின் மீது ஓ.பி.எஸ். தரப்புக்கு அதிருப்தி இருந்தால், அதற்கு முறையிட வேண்டிய இடம் தேர்தல் ஆணையத்தில்தான். கட்சிக்குள் தனக்கு பெரும்பான்மை இல்லை என்பதால், ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தை அணுகவில்லை“ என அடுக்கடுக்கான வாதங்களை சி.எஸ் வைத்தியநாதன் முன்வைத்தார். அப்போது  ஓ.பி.எஸ்-ஐ நீக்க வேண்டும் என்பது, அதிமுக பொதுகுழுவின் தீர்மானத்தில் ஒன்றாக இல்லாதபோது அதனை எப்படி செய்தீர்கள் ? என  நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

பின்னர் அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி வாதங்களை முன்வைத்தார். “தேவைப்படும்போது எப்போதும் வேண்டுமானாலும் அதிமுக பொதுக்குழுவை கூட்டலாம், பொதுக்குழுவே உச்சபட்ச அதிகாரம் படைத்தது. பொதுக்குழு முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும் என்பது விதி. அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா மரணத்துக்கு பின்னர் கட்சியை வழி நடத்த தலைமை வேண்டும் என்ற நிலை வந்தது.  அந்த நேரத்தில் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் ஆகிய இருவரில் இபிஎஸ்க்குத்தான் கட்சியில் அதிக ஆதரவு இருந்தது.

இருப்பினும் கட்சியின் நலனுக்காக இரட்டை தலைமையை ஏற்படுத்தி இருவரும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என பொதுக்குழு மூலம் பதவிகளை உருவாக்கி கட்சியை வழி நடத்தினர். ஆனால் இரட்டை தலைமையால் கட்சியின் பல்வேறு முடிவுகள் எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே ஒற்றை தலைமை வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதன்படிதான் உரிய முறையில் பொதுக்குழுவை கூட்டி ஒற்றை தலைமை குறித்த தீர்மானம் கொண்டுவரப்பட்டது” என அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

காஞ்சி காமாட்சி அம்மனுக்கு வைர வளையலை காணிக்கையாகச் செலுத்திய பக்தர்

Web Editor

மணீஷ் சிசோடியா மீது புதிய ஊழல் வழக்கு – சிபிஐ நடவடிக்கை

Web Editor

முடிவடைந்தது மீன்பிடி தடைக்காலம் – மீனவர்கள் உற்சாகம்

Web Editor