ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சி தமிழ்நாடு மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர்  கடந்தாண்டு ஜூலை 5ஆம் தேதி  வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சூழலில், இந்த வழக்கை  காவல் துறையினர் நியாயமாக விசாரிக்கவில்லை என கூறி, விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் கோரி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில செயலாளரும், ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரருமான கீனோஸ் ஆம்ஸ்ட்ராங் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பல்வேறு தரப்பு வாதங்களையும் கேட்டு, விசாரணை நிறைவடைந்த நிலையில் இன்று தீர்ப்பளித்துள்ளது.

அத்தீர்ப்பில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  மேலும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை விசாரித்து 6 மாதங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பாக இதுவரை விசாரணை நடத்தி திரட்டிய ஆவணங்கள் அனைத்தையும் சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைக்க சிபி-சிஐடிக்கு உத்தரவிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.