கடலூரில் நேற்று திடீரென வீசிய சூறைக்காற்றால் 1000 ஏக்கர் வாழை மரங்கள் முறிந்து சேதமானது.
கடலூர் மாவட்டத்தில் வெயில் சுட்டெரித்து வருகிறது. அக்னி நட்சத்திரம் முடிந்தும் வெயிலின் தாக்கம் குறையாததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். 4 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து வெயில் 100 டிகிரியை கடந்தது. நேற்றும் 103.64 டிகிரி வெயில் கொளுத்தியது.
இந்நிலையில் நேற்று மாலையில் கடலூரை அடுத்த ராமாபுரம், கீரப்பாளையம், ஒதியடிக்குப்பம், வெள்ளக்கரை, அரசடிக்குப்பம், வழிசோதனைப்பாளையம், அன்னவல்லி, வழுதலம்பட்டு, உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இடி, மின்னல், சூறைக்காற்றுடன் மழை பெய்தது.
இதனால வாழை மரங்கள் முறிந்து விழுந்தன. குலை தள்ளி அறுவடைக்கு தயாராக இருந்த வாழைகள் சேதமானதை கண்ட விவசாயிகள் கண்ணீர் வடித்தனர். சுமார் 1000 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பூவன்,ஏலக்கி,பேயன் உள்ளிட்ட வாழைகள் முறிந்து சேதமடைந்ததாக விவசாயிகள் தெரிவித்தனர்.
ஏக்கருக்கு 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை செலவு செய்ததாகவும் அவை பலனின்றி போனதாகவும் விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். இதனால் உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் அரசை அவர்கள் கேட்டுக்கொண்டனர்.







