ரூ.4000 கோடியில் நடந்த பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா? – தமிழ்நாடு அரசுக்கு இபிஎஸ் கேள்வி

சென்னையில் 4000 கோடி ரூபாய் செலவில் நடந்த மழைநீர் வடிகால் பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா என தமிழ்நாடு அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி விடுத்துள்ளார். இது தொடர்பாக…

சென்னையில் 4000 கோடி ரூபாய் செலவில் நடந்த மழைநீர் வடிகால் பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா என தமிழ்நாடு அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது :

“மிக்ஜாம் புயலால் சிரமப்படும் மக்களுக்கு முழு அளவில் மீட்புப் பணிகளை மேற்கொள்ளாத,  நிவாரண உதவிகளை வழங்காத திமுக அரசுக்கு கடும் கண்டனம்!  மழை நின்று  3 நாட்கள் ஆன நிலையில்,  இப்போது வரை சென்னை மாநகரப் பகுதிகளில் உள்ள சுமார் 38,500 பிரதான உட்புற சாலைகளில்,  சுமார் 20 ஆயிரம் சாலைகளில் மழை வெள்ளம் தேங்கியுள்ளது.  அதேபோல்,  சென்னையைச் சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் வெள்ளம் வடியாமல்,  மழை நீர் வடியாமல்,  கழிவு நீருடன் கலந்து தொற்று நோய் பரவும் அபாயத்தில் உள்ளது.

சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆவின் பால் விநியோகத்தை சீர் செய்யவும்,  அண்டை மாநிலங்களில் இருந்து பாலை உடனடியாகக் கொள்முதல் செய்து மக்களுக்குத் தங்கு தடையின்றி பால் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் வகையில் அரிசி,  பருப்பு,  பால்,  மளிகைப் பொருட்கள் மற்றும் தேவையான மருத்துவ வசதிகளை உடனடியாக வழங்கிடவும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

இதையும் படியுங்கள் : “சென்னைக்கு அடுத்த புயலா? வதந்திகளை நம்பாதீர்..!” – தமிழ்நாடு வெதர்மேன் விளக்கம்

சென்னை மாநகரில் சுமார் 4,000/- கோடி ரூபாய் மதிப்பீட்டில் வெள்ளநீர் வடிகால் பணிகள் நடந்தாக திமுக அரசு மக்களை ஏமாற்றி வருகிறது.  நடந்து முடிந்த பணிகளின் பட்டியலை வெளியிட இந்த அரசு தயாரா? பணி முடிந்த ஒவ்வொரு இடத்துக்கும் செலவிட்ட தொகை கணக்கை தரத் தயாரா? பணிகள் 100 சதவீதம் முடிந்த இடங்கள்,  தொடர்ந்து பணி நடைபெறும் இடங்கள் குறித்து வெள்ளை அறிக்கை ஒன்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட வேண்டும்.

ஏதாவது சொல்லி,  ஏமாற்றி தப்பித்துவிடலாம் என்று இந்த ஆட்சியாளர்கள் நினைத்தால், அதற்குண்டான பதிலை பாதிக்கப்பட்ட மக்கள் விரைவில் வெளிப்படுத்துவார்கள் என்று எச்சரிக்கிறேன்.”

இவ்வாறு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.